Vinayakan: கைய புடிச்சி இழுத்தியா... விமானத்தில் வில்லங்கம்... வில்லன் நடிகர் விநாயகன் பஞ்சாயத்து
திருவனந்தபுரம்: மலையாளத்தில் முன்னணி வில்லன் நடிகராக வலம் வருபவர் விநாயகன்.
மலையாளம் மட்டுமின்றி தமிழில் சிறுத்தை, மரியான் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் கோவா சென்றிருந்த விநாயகன், சக விமான பயணியிடம் துஷ்பிரயோகம் செய்ததாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து விமான பயணி அளித்த புகாரின் பேரில் விநாயகன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வில்லன் நடிகர் விநாயகனின் புது பஞ்சாயத்து:1995ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மாந்திரிகம் படத்தில் மைக்கேல் ஜாக்சனுக்கு டூப் போட்டு நடித்தவர் விநாயகன். பின்னர் 2001ம் ஆண்டு முதல் மலையாளத்தில் கவனிக்கப்படக்கூடிய நடிகராக வலம் வருகிறார். 5 சுந்தரிகள், கம்மட்டிபாடம், தோத்தப்பன், ட்ரான்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல், தமிழில் திமிரு, சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல், சிறுத்தை, மரியான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மரியான் படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். அப்போது முதல் தமிழ் ரசிகர்களிடமும் விநாயகனுக்கு நல்ல ரீச் இருந்தது. இந்நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் முக்கியமான ரோல் செய்துள்ளார். நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனித்துவமான நடிப்பு, மிரட்டலான உடல்மொழி என பல சிறந்த நடிகராக வலம் வரும் விநாயகன், சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாதவர். சமீபத்தில் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்த விநாயகன், 10 பெண்களை அவர்களின் சம்மதத்துடன் உடலுறவு கொண்டதாக கூறி பகீர் கிளப்பினார். இந்த சர்ச்சைக்கு இன்னும் முடிவு வராத நிலையில் மீண்டும் இன்னொரு பஞ்சாயத்தில் சிக்கியுள்ளார் விநாயகன்.
அதாவது சமீபத்தில் கோவா சென்றிருந்த விநாயகன், இண்டிகோ விமானத்திற்காக காத்திருந்த சக பயணியிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. கோவாவில் இருந்து இண்டிகோ விமானத்தில் ஏறுவதற்காக காத்திருந்த பயணி ஒருவர், தன்னுடைய செல்போனின் சில வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது விநாயகன் அந்த பயணியை துஷ்பிரயோகம் செய்வதுபோல் நடந்துகொண்டாரம், மேலும் தன்னை வீடியோ எடுத்ததாகவும் தகராறு செய்துள்ளார்.
விநாயகனின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அந்த பயணி வீடியோ எடுக்கவில்லை என கூறியதோடு, செல்போனை செக் செய்துகொள்ளவும் அனுமதித்துள்ளார். ஆனால் விநாயகன் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்ததால், விமான நிறுவனத்தை அணுகி புகார் தெரிவித்துள்ளார். அதற்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால், ஏர்சேவா போர்டல் மூலம் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் துணைச் செயலரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதில் விநாயகனை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் விநாயகன் மீதான இந்த வழக்கு விரைவில் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











