தனது பெயரில் போலி கணக்கு உருவாக்கி ஆன்லைனில் மோசடி.. பிரபல நடிகர் டிஜிபியிடம் பரபர புகார்!
கொச்சி: தனது பெயரில் போலி கணக்கு உருவாக்கி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக பிரபல நடிகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
'ஆவாரம்பூ' என்ற படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர், மலையாள நடிகர் வினீத்.
தொடர்ந்து, புதிய முகம், ஜாதிமல்லி, காதலர் தினம், மே மாதம், காதலர் தினம் உள்பட பல படங்களில் நடித்தார்.

மீண்டும் குணச்சித்திரம்
ரஜினியின் சந்திரமுகி படத்தில் இவர் நடித்த கேரக்டர் பேசப்பட்டது. கடைசியாக இவர் ராஜீவ் மேனன் இயக்கிய சர்வம் தாளமயம் படத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் பிரபல ஹீரோவாக நடித்து வந்த இவர், ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

அர்ஜுனுக்கு டப்பிங்
மற்ற மொழிகளிலிருந்து மலையாளத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு டப்பிங் பேசியும் வருகிறார். பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், அர்ஜுன், பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ள, 'மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்' என்ற படத்தில், நடிகர் அர்ஜுனுக்கு டப்பிங் பேசியுள்ளார். முன்னதாக லூசிபர் படத்தில் விவேக் ஓபராய்க்கு பேசியிருந்தார்.

மோசடியில் கும்பல்
இவர், தனது பெயரில் போலி கணக்கு உருவாக்கி ஆன்லைனில் ஒரு கும்பல் வேலை வாய்ப்பு மோசடியில் ஈடுபடுவதாக புகார் அளித்துள்ளார். கேரள டிஜிபிக்கு அனுப்பியுள்ள அந்த புகாரில், தங்கள் குடும்ப புகைப்படத்தைப் தவறாகப் பயன்படுத்தியும், தனது வாட்ஸ் அப் புரபைலை போலியாக பயன்படுத்தியும் மோசடி செய்து வருவதாகக் கூறியுள்ளார். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் வினீத் கூறியுள்ளார்.

என்னிடம் எச்சரித்தார்
கடந்த 4 மாதத்தில் இதுபோன்று நடப்பது இது இரண்டாவது முறை என்று அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி வினீத் கூறும்போது, 'சினிமா நண்பர் ஒருவர் இந்த மோசடி கும்பல் பற்றி என்னிடம் எச்சரித்தார். அவருடைய நண்பரிடம் இந்த மோசடி கும்பல் தொடர்புகொண்டதை அடுத்து அவர் என்னிடம் தெரிவித்தார்.

ஆன்லைன் மோசடி
இதுபற்றி என் சமூக வலைதளப் பக்கங்களிலும் எச்சரித்துள்ளேன். மக்கள் இதுபோன்ற மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்றார். நடிகர் வினீத் கொடுத்துள்ள இந்தப் புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில நாட்களாக ஆன்லைன் மோசடி புகார் அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











