விநோதய சித்தம் தெலுங்கு ரீமேக்.. ரீலிஸ் தேதியை அறிவித்தது படக்குழு
ஹைதராபாத்: சமுத்திரக்கனி இயக்கிய விநோதய சித்தம் படத்தின் தெலுங்கு ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பவன் கல்யாண் நடித்திருக்கிறார்.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சமுத்திரக்கனி. பாலசந்தர் இயக்கிய நாடகங்களிலும் பணியாற்றிருக்கும் சமுத்திரக்கனி அதில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

நெறஞ்ச மனசு சமுத்திரக்கனி
தொடர்ந்து பாலசந்தருடன் பயணித்துவந்த அவர் விஜயகாந்த்தை வைத்து நெறஞ்ச மனசு என்ற படத்தை இயக்கினார். கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் நாடகங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இருப்பினும் சினிமா மீதான மோகன் விடாததால் நடிப்பிலும், இயக்கத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

நடிகரிலிருந்து இயக்குநராக மாறிய சமுத்திரக்கனி
அதன்படி சசிக்குமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரத்தில் நடித்த சமுத்திரக்கனி அடுத்ததாக நாடோடிகள் படத்தை இயக்கினார். சசிக்குமார், விஜய் வசந்த், அனன்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நட்பை மையமாக வைத்து உருவான அந்தப் படம் மெகா ஹிட்டானது. அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தோடு போராளி, நிமிர்ந்து நில், அப்பா போன்ற படங்களை இயக்கினார். இவை அனைத்தும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிதாக போகவில்லை.

மீண்டும் நடிகரான சமுத்திரக்கனி
இந்தச் சூழலில் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் கனி. அதன்படி அவர் வேலையில்லா பட்டதாரி, சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து தான் ஒரு மிகச்சிறந்த நடிகன் என்பதை உணர்த்தினார். அதன் பிறகு நடிகராக அவரது கிராஃப் உச்சம் சென்றது. அந்தவகையில்,விசாரணை, ஆர்.ஆர்.ஆர், துணிவு, வாத்தி என பல படங்களில் நடித்தார். இதில் விசாரணை படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார்.

சமுத்திரக்கனியின் விநோதய சித்தம்
நடிப்பில் கவனம் செலுத்தினாலும் சமுத்திரக்கனிக்குள் இருக்கும் படைப்பாளி உறங்காததால் விநோதய சித்தம் படத்தை அவர் இயக்கினார். கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில் தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இறப்புக்கு பிறகு என்ன நிகழும் என்பதை தனக்கே உரிய பாணியில் சொல்லியிருந்ததால் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த ஜானரில் இதுவரை பெரும்பாலும் படங்கள் வராததால் இதனை ரசிகர்கள் ரசிக்கவே செய்தனர்.

தெலுங்கு ரீமேக் ரிலீஸ் தேதி
படம் கோலிவுட்டில் ஹிட்டானதை அடுத்து தெலுங்கிலும் ரீமேக் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் இயக்கிய சமுத்திரக்கனியே தெலுங்கிலும் படத்தை இயக்கினார். பிரபல இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் வசனம் எழுதுகிறார். கடந்த பிப்ரவரி மாதம் இதற்கான படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் இந்தப் படமானது ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











