கெரியரின் உச்சத்தை விட்டுவிட்டு வரச்சொல்லி நாங்க அழவில்லை.. அப்படி யாரு வரச்சொன்னா? விளாசிய பிரபலம்
சென்னை: நடிகர் விஜய் நாளுக்கு நாள் கடுமையான விமர்சனங்களையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக அவரது அரசியல் நடவடிக்கைகளுக்கு பலரும் அளிக்கும் பதில் விமர்சனங்கள் பெரும் பேசுபவர்களாகவே மாறி வருகின்றன. அந்த வகையில் நடிகை வினோதினி வைத்தியநாதன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது அந்த வீடியோவில் வினோதினி பேசுகையில், "முதலில் இந்த தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். மிகச் சரியான நபரை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இந்த வீடியோவை மிகவும் ஆதங்கத்துடன் தான் நான் பேசுகிறேன். சமீபத்தில் சிலர் நான் எனது கெரியரின் உச்சத்தை விட்டு விட்டு வந்தேன், எல்லா வலிகளையும் தாங்கிக்கொண்டு நான் உங்களுக்காக வருகிறேன். மிகப்பெரிய பதவியை விட்டுவிட்டு வந்திருக்கிறேன் என்றெல்லாம் கூறி மக்கள் மத்தியில் ஓட்டு கேட்கிறார்கள்.
நான் அவர்களை நோக்கி ஒன்று கேட்கிறேன், ஒரு மனிதன் ஒரு விஷயத்தை அவனது சொந்த விருப்பம் இல்லாமல் எப்போதும் செய்ய மாட்டான். அப்படி இருக்கும் பொழுது நீங்கள் உங்களுடைய சொந்த விருப்பத்தின் பேரில் தானே அரசியலில் ஈடுபடுகிறீர்கள். அப்படி இருக்கையில் நீங்கள் ஏன் கெரியரின் உச்சத்தை விட்டு விட்டு வந்தேன், பதவியை விட்டு விட்டு வந்தேன், என்று உங்களை நீங்களே பரிதாபமானவராக காட்டிக் கொள்கிறீர்கள்.

டாக்டரைப் பாருங்க: உங்களை யார் அப்படி விட்டு விட்டு வரச் சொன்னது? நாங்கள் கேட்டோமா? நாங்கள் அழைத்தோமா? உங்களுக்கு ஏதாவது வலி இருந்தால் அது தொடர்பாக மருத்துவரை போய் பாருங்கள், அவர்கள் உங்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள். நமது நாட்டில் எத்தனையோ மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள், ஆதரவற்ற குழந்தைகள் இருக்கிறார்கள், ஆதரவற்றோர் இருக்கிறார்கள் அவர்களெல்லாம் சந்திக்காத நெருக்கடியை வலியையா நீங்கள் சந்தித்து விட்டீர்கள்? நீங்கள் நினைத்தால் உங்கள் வாழ்க்கையை, உங்கள் தொழிலை மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் அவர்களால் அது கூட முடியாது. அப்படி இருக்கும் பொழுது உங்களை நீங்களே ஒரு பரிதாபத்திற்குரிய மனிதராக காட்டி எதற்காக மக்கள் மத்தியில் வாக்கு கேட்கிறீர்கள்.
நாங்க அழவில்லை: நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும், என்று நாங்கள் யாரும் அழவில்லை. நீங்கள் வந்து விட்டீர்கள், உங்களை நாங்கள் வரவேற்கிறோம். அரசியலுக்கு வந்த பின்னர் மக்களுக்கு என்ன செய்வேன், என்பதை மட்டும் பேசுங்கள். அதை விட்டுவிட்டு நான் கெரியரின் உச்சத்தில் இருந்து வந்தேன். பதவியை தூக்கி எறிந்து விட்டு வந்தேன் என்றெல்லாம் சிம்பதி உருவாக்கிக் கொண்டு இருக்காதீர்கள். அரசியல் என்பது உங்களுடைய விருப்பம், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கின்ற உங்களுடைய எண்ணத்திற்காக நீங்கள் வருகிறீர்கள். அது மட்டும் இல்லாமல் இதில் உங்களுக்கு ஆதாயமும் இருக்கிறது. பதவி, புகழ் என்று எல்லாம் உங்களுக்கு கிடைக்கப் போகிறது. அப்படி இருக்கையில் எதற்காக தொடர்ந்து கெரியரின் உச்சத்தை விட்டு விட்டு வந்தேன், அதை விட்டுவிட்டு வந்தேன், இதை விட்டு விட்டு வந்தேன் என்று தினந்தோறும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள், இதை பார்க்கவே சலிப்பாக இருக்கிறது.

சின்ன பசங்க: உங்கள பின் தொடர்பவர்கள் யார் என்று பாருங்கள், மிகவும் இளம் வயது உடையவர் தான் உங்களை பின் தொடர்கிறார்கள். அந்த வயதுடையவர்களை மிக எளிதாக உணர்ச்சி வசப்பட வைக்க முடியும். அப்படி இருக்கையில் அவர்கள் மத்தியில் நல்ல விஷயத்தை பரப்ப, பகிர முயற்சியுங்கள். மேலும் உங்களுக்கு எதிராக யாராவது கருத்து சொன்னாலே அவர்களை உங்களை பின்தொடரும் இந்த இளைஞர்கள் மிக மோசமாக விமர்சிக்கிறார்கள். இது போன்ற விஷயங்களை எல்லாம் கட்டுப்படுத்துங்கள்.
பாராட்டு: உங்களுக்கு எப்போதுமே ஒரு பிரச்சனை இருக்கிறது என்று தோற்றத்தை நீங்கள் முன்வைத்துக் கொண்டே இருந்தால், அதனால் அந்த இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையை நாசம் செய்து கொள்ளும் ஏதாவது ஒரு அபாயகரமான வேலையை செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகம். எனவே நீங்கள் பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள்" என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார். நடிகை வினோதினியின் இந்த வீடியோ பலர் கவனத்தை ஈர்த்தது மட்டுமில்லாமல் பலரும் வினோதனையின் இந்த வீடியோவுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











