சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்திய மகான்.. வினுசக்கரவர்த்தியின் 7ம் ஆண்டு நினைவு தினம்!
சென்னை: தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகராக இருந்த நடிகர் வினுச்சக்கரவர்த்தியின் 7ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கார்த்திக், ரஜினி, பிரபு, சத்யராஜ், அஜித், விஜய், என அனைத்து முன்னனி நடிகர்களின் படங்களிலும் வினுசக்கரவர்த்தி நடித்திருக்கிறார். அவரின் சிறப்பு அம்சமே அவருடைய தனித்துவமான குரல்தான்.
1945 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்தவர் நடிகர் வினுசக்கரவர்த்தி. சென்னையில் பள்ளிப்படிப்பையும், கல்லூரி படிப்பை முடித்த இவர், காவல்துறையில் பணியில் சேர்ந்தார். பின் தெற்கு ரயில்வேயில் 4 ஆண்டுகள் பணிபுரிந்த இவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால், பல நாடகம் எழுதி அதில் நடித்தும் உள்ளார். இதையடுத்து, கன்னட சினிமாவில் கதாசிரியராக தனது திரைவாழ்க்கையை தொடங்கினார்.

வண்டிச்சக்கரம்: வினுசக்கரவர்த்தி எழுதிய வண்டிச்சக்கரம் படத்தில் சிலுக்கு என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஸ்மிதாவை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதுவே நாளடைவில் சில்க ஸ்மிதா என்ற அடைமொழியாக மாறியது. இந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவை தனது கைக்குள் வைத்திருந்த சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டுக்காக நடிகர்களும், தயாரிப்பாளர்களும் தவம் கிடந்தனர். இப்படிப்பட்ட சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்திய மகான் வினுசக்கரவர்த்தி என்று சில்கின் ரசிகர்கள் இப்போதும் இவரை கொண்டாடி வருகின்றனர்.
தி டர்ட்டி பிக்சர்ஸ்: சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்று திரைப்படம் தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் வெளியானது. இப்படத்தை தயாரிப்பாளர் ஏக்தா கபூர் சித்தரித்த விதத்தை வினுசக்கரவர்த்தி கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் சில்க் ஸ்மிதாவின் கதாபாத்திரத்தில் வித்யா பாலனை நடிக்க வைத்தது சரியான தேர்வல்ல என்றும் தனது கருத்தை தைரியமாக முன்வைத்தார்.
ஆயிரம் படங்கள்: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் வினுசக்கரவர்த்தி. இவர் நடிப்பில் வெளியான குருசிஷ்யன், அண்ணாமலை, அருணாசலம், நாட்டாமை, மாப்பிளை கவுண்டர், அமர்க்களம், நினைத்தேன் வந்தாய், சுந்தரா டிராவல்ஸ் போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்ற திரைப்படங்களாக அமைந்தன. 2007ம் ஆண்டு ராகவா லாரன்ஸ் நடித்த முனி திரைப்படம் வினுசக்கரவர்த்தியின் ஆயிரமாவது படமாகும்.
இன்று நினைவு தினம்: தன்னுடைய குணசித்திர நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்த வினுசக்கரவர்த்தி, உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2017ம் ஆண்டு உயிரிழந்தார். அவரின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. வினுசக்கரவர்த்தியின் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனை நடத்தி மலரஞ்சலி செலுத்தினர். மேலும், வினுசக்கரவர்த்தியின் தீவிர ரசிகர்கள் அவரை நினைவு கூர்ந்து சோஷியல் மீடியாவில் போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications