நீங்க ஹீரோயினை அடிச்சதெல்லாம்.. இயக்குநர் பாலாவை சங்கடத்தில் ஆழ்த்திய மை லார்ட் நடிகை
சென்னை: இயக்குநர் பாலாவின் மார்க்கெட் இப்போது பெரிய அளவுக்கு இல்லை. கடைசியாக அருண் விஜய்யை வைத்து அவர் இயக்கியிருந்த வணங்கான் திரைப்படம் அவரது வழக்கமான டெம்ப்ளேட்டில் அமைந்து ரசிகர்களை திருப்திப்படுத்த தவறியது. அவரது ரசிகர்கள் இதை நினைத்து அப்செட்டாக; அவரை விமர்சிப்பவர்களோ பாலா ஹீரோ, ஹீரோயின்களை படுத்தியதுதான் இப்போது திருப்பி அடிக்கிறது என்றும் சொன்ன சூழலில்; நடிகையின் செயல் ஒன்று மீண்டும் இதுகுறித்து பேச்சை கிளப்பியிருக்கிறது.
சேது படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டை உருவாக்கிய பாலா ஒரு காலத்தில் தொட்டதெல்லாம் ஹிட்டாக இருந்தது. அவர் இயக்கிய நந்தா, பிதாமகன், நான் கடவுள் திரைப்படமெல்லாம் காலத்துக்கும் அழியாத க்ளாசிக். பாரதிராஜா, பாக்யராஜுக்கு பிறகு சாமானியர்களும் இயக்குநர் ஆகலாம்; எளிய மனிதர்களின் வாழ்க்கையை படமாக்கி வெல்லலாம் என்ற பெரிய நம்பிக்கையை விதைத்தவர் இயக்குநர் பாலா.
சறுக்கலில் இயக்குநர்: சமீப காலமாக அவருக்கு சங்கடமான பல சூழ்நிலைகள் உருவாகின. முதலில் அவர் தனது மனைவி மலரை பிரிந்தார். அதனையடுத்து விக்ரமின் மகன் துருவ்வை வைத்து அவர் இயக்கிய வர்மா படம் கிடப்பில் போடப்பட்டது. யாருக்காகவும் தனது கொள்கையிலிருந்து இறங்கி வராத அவர்; விக்ரம் மகன் என்பதற்காக அர்ஜுன் ரெட்டி படத்தை ரீமேக் செய்ய ஒத்துக்கொண்டார். அப்போதே இது ஒரு மாதிரி இடித்தது. ஆனாலும் அனைத்தையும் கடந்து படம் வந்துவிடும் என்றுதான் நினைத்தார்கள்.

என்ன காரணம்?: அப்படத்தை முழுக்க முழுக்க தனது ஸ்டைலில் இயக்கியிருந்தார். அதனை பார்த்த விக்ரமும், தயாரிப்பாளரும் இதை வெளியில் விட்டால் ஹிட்டாகாது என்று முடிவெடுத்து புதிய இயக்குநரை வைத்து படத்தை மீண்டும் இயக்க செய்தார்கள். தனக்கு உதவிய பாலாவின் ஸ்டைல் தனது மகனுக்கு முழுவதுமாக உதவாது என்று விக்ரம் முடிவெடுத்தது பெரிய ஆச்சரியம்தான். ஆனாலும் அந்த நிலைமை பாலாவின் திரையுலக வாழ்க்கையில் கண்டிப்பாக ஒரு ஏமாற்றம்தான்.
அவர் மீது வைக்கப்படும் விமர்சனம்: தொடர்ந்து வணங்கானிலிருந்து சூர்யா வெளியேறியது; அருண் விஜய்யை வைத்து படத்தை இயக்கி வெளியிட்டதிலும் பெரிய ரெஸ்பான்ஸ் கிடைக்காமல்; மாற்று திறனாளிகள் குளிப்பதை காட்சிப்படுத்திய விதத்துக்கு பலரும் கண்டனத்தை பதிவு செய்தது வரை அத்தனைக்குமே பாலாவின் முன்வினைகள்தான் காரணம் என்றும் ஒருதரப்பினர் சொல்கிறார்கள். அதாவது பரதேசி உள்ளிட்ட படங்களை அவர் இயக்கிய காலகட்டத்தில் நடிகர்கள், நடிகைகளை அவர் அடிப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகின. அதெல்லாம் சேர்ந்துதான் இப்படி படுத்துகிறது எனவும் பேச்சுக்கள் எழுந்தன.
நடிகை செய்தது: இப்படி தொடர்ந்து சறுக்கலில் இருக்கும் அவர் மை லார்ட் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். விழாவில் பேசும்போது புதிய பாலாவை பார்க்க முடிந்தது. பொதுவெளிகளில் தன்னை பெரிதாக பேச்சில் முன்னிறுத்துக்கொள்ளாத அவர்; இந்த முறை கலகலப்பாக பேசி இயல்பாகவே இடம்பிடித்துவிட்டார். படத்தின் ஹீரோயினான சைத்ராவின் நடிப்பை புகழ்ந்து தள்ளினார். விழா முடிந்து கிளம்பும்போது பாலாவின் கைகளை பிடித்துக்கொண்டு சைத்ரா, 'நீங்கள் ஹீரோ, ஹீரோயின்களை எல்லாம் அடிச்சதெல்லாம் நான் பார்த்தேன்.. நீங்கள் இந்தப் படத்தை பார்த்துவிட்டு எப்படி இருக்கும் இன்று கூப்பிடுங்கள்' என சொன்னார். இதை கேட்ட பாலா சிரித்துக்கொண்டே தலையாட்டி அந்த சூழலை சமாளித்துவிட்டார். இந்த வீடியோ இப்போது ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











