அது உண்மைதான்.. பிரபல நடிகர் விஷால், அவர் அப்பாவுக்கு கொரோனா பாதிப்பு.. தீவிர ஆயுர்வேத சிகிச்சை!
சென்னை: தனக்கும் தன் தந்தைக்கும் கொரோனா தொற்று உறுதியானது உண்மைதான் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிரட்டி வருகிறது. இதன் தாக்கம் தீவிரமாகி வருகிறது.
இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் கடும் முயற்சி எடுத்து வருகின்றன. இந்த வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உயர்ந்து வருகிறது
உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. தினமும் இதனால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டும் பாதிக்கப்படுவர்கள் அதிகரித்து வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடும் முயற்சி எடுத்து வருகின்றன.

ஐஸ்வர்யா ராய்
இந்த கொரோனா தொற்று பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உட்பட பலருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. நடிகை சுமலதா, சின்னத்திரை நடிகை நவ்யா ஸ்வாமி உட்பட சில நடிகர், நடிகைகளும் இந்த தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வருகின்றனர்.

நடிகர் விஷால்
தமிழகத்திலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. பிரபல நடிகர் விஷால், அவர் அப்பா ஜி.கே.ரெட்டி ஆகியோருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவச் சிகிச்சை எடுத்து தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். இப்போது குணமடைந்துவிட்டனர். இது பற்றிய செய்தி பரவியதை அடுத்து நடிகர் விஷால், உண்மைதான் என்று உறுதிப்படுத்தி உள்ளார்.

ஆயுர்வேத சிகிச்சை
அவர் ட்விட்டரில் இதுபற்றி தெரிவித்துள்ளார். 'என் தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவருக்கு உதவி செய்ததால், எனக்கும் அதற்கான அறிகுறி தென்பட்டது. காய்ச்சல், இறுமல், குளிர் இருந்தது. எனது மானேஜருக்கும் இந்த அறிகுறி இருந்தது. இதனால் நாங்கள் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டோம். இப்போது நன்றாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











