இளையராஜா பயோபிக்.. வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் கேரக்டர்களில் நடிப்பவர்கள் இவர்களா?.. ஃபேன்ஸ் ஆச்சரியம்
சென்னை: இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவிருக்கிறது. அந்த அதிகாரபூர்வ அறிவிப்பு வந்ததிலிருந்து எங்கும் இளையராஜாவின் பயோபிக் பற்றியே பேச்சுக்கள் ஓடுகின்றன. படம் ஒழுங்காக வந்துவிடுமா, இளையராஜாவின் வாழ்க்கயில் நடந்தது அத்தனையும் படத்தில் இடம்பெறுமா என எக்கச்சக்க கேள்விகள். இந்தச் சூழலில் இந்த பயோபிக்கில் பாடலாசிரியர் வைரமுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் கேரக்டர்களில் நடிக்கவிருப்பதாக சில நடிகர்களின் பெயர்கள் அடிபடுகின்றன.
தமிழ் சினிமாவின் இசையின் முகத்தை மாற்றி அமைத்தவர் இளையராஜா. அவர் இசையமைக்க வந்த பிறகுதான் வைரமுத்து சிந்து பைரவியில் எழுதியதுபோல் சேரிக்கும் சேர வேண்டும் அதற்கும் பாட்டு படி என்ற வரி உண்மையானது. ஆம் அவரால்தான் வரப்பில் நின்றவரும் வாய் திறந்து பாட ஆரம்பித்தார். தனது முதல் படமான அன்னக்கிளியிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் இளையராஜா. பாடல்களை கேட்ட பலரும் அட இது நம்ம ஊர் இசை மாதிரி இருக்கே என்று சிலாகிக்க ஆரம்பித்தனர்.

பாவலர் க்ரூப்ஸ்: இளையராஜாவின் இசை இன்று உலகம் முழுக்க பயணித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அவரது இசை பயணம் முதலில் ஆரம்பித்தது கம்யூனிஸ்ட் மேடைகளில். தனது மூத்த சகோதரரான பாவலர் வரதராஜன் நடத்திய பாவலர் க்ரூப்ஸ் என்ற இசை குழுவை நடத்திக்கொண்டிருந்தார். அந்தக் குழுவில் வாசிப்பாளராக இருந்தவர் இளையராஜா. பிறகு பல போராட்டங்களை கடந்து சினிமாவில் அறிமுகமாகி தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்.
கோட்டையில்ல கொடியுமில்ல அப்பவும் ராஜா: தனிப்பட்ட தாக்குதல்கள் மட்டுமின்றி அவரை சினிமாவிலிருந்து எப்படியாவது ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என பெரும் கூட்டமே வேலை செய்தது. ஆனால் திறமை இருக்கும் ஒருவரை சினிமா ஒதுக்கி தள்ளிவிடுமா என்ன?. அதுபோல்தான் சினிமா இளையராஜாவை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது. அவரிடம் கோட்டையும் இல்லை; கொடியும் இல்லை; இருந்தாலும் இன்னும் பல தலைமுறைகளுக்கு அவர்தான் இசை உலகின் ராஜாவாக இருப்பார்.
பயோபிக்: அவரது இசையமைப்பில் அடுத்ததாக விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படமாக் எடுக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. படத்தை மெர்குரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இதில் இளையராஜாவாக சிறந்த நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கிறார். அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்கவிருக்கிறார்.
படத்தில் யார் யார்: படத்துக்கு கமல் ஹாசன் திரைக்கதை எழுதுவது மேலும் ஆவலை தூண்டியிருக்கிறது. சூழல் இப்படி இருக்க இளையராஜாவின் திரை வாழ்க்கையில் ரஜினி, கமல் ஹாசன், வைரமுத்து, பாரதிராஜா, பாலசந்தர், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் எல்லாம் தவிர்க்க முடியாதவர்கள். எனவே இந்தப் படத்தில் அவர்கள் கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்று கேள்விகள் எழுந்தன. ரஜினி, கமல் ஆகியோரே அவர்களது கேரக்டர்களில் நடிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
இவற்றில் முக்கியமான கேள்வி எதுவென்றால் வைரமுத்து மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கேரக்டர்கள் பற்றியதுதான். ஏனெனில் இளையராஜா - வைரமுத்து கூட்டணி கல்ட் க்ளாசிக் கூட்டணி. இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்து பிரிந்தவர்கள் கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆகியும் மீண்டும் இணையவில்லை. அதேபோல் ராஜாவின் கோட்டைக்குள் படையெடுத்து இசை சாம்ராஜ்ஜியத்தில் பங்கு போட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். எனவே இவர்கள் இருவரது கேரக்டர் படத்தில் எப்படி காண்பிக்கப்படப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் கேரக்டர்களில் நடிக்கவிருப்பதாக இரண்டு நடிகர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள் வேறு யாருமில்லை விஷாலும், சிம்புவும். வைரமுத்து கேரக்டரில் விஷாலும், ரஹ்மான் கேரக்டரில் சிம்புவும் நடிக்கலாம் என்றும் அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாகவும் பேச்சுக்கள் எழ தொடங்கியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











