அரசியலுக்கு வருவது உறுதி.. விஜய்க்கு போட்டியாக களமிறங்குகிறாரா விஷால்?.. என்னங்க நடக்குது?
சென்னை: செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஷால். சில ஹிட் படங்களை கொடுத்திருக்கும் அவர் கடைசியாக மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார். அடுத்ததாக ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துவருகிறார். மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்துவரும் அவர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையை படித்த பலரும் விஷால் எப்போது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கணித்திருக்கின்றனர். இந்தச் சூழலில் அவரது தந்தை ஜி.கே.ரெட்டி விஷாலின் அரசியல் ஆசை குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
சினிமா துறையில் இருப்பவர்கள் அரசியல் கட்சி ஆரம்பிப்பது ஒன்றும் தமிழ்நாட்டுக்கு புதிது அல்ல. அண்ணா, எம்ஜிஆர், விஜயகாந்த், சரத்குமார், பாக்யராஜ், டி.ராஜேந்தர் என பலர் கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள். விஜய்யும் தற்போது தமிழக வெற்றி கழகம் என்று கட்சியை தொடங்கியிருக்கிறார். அவரது அரசியல் என்ட்ரி பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால் இனி தமிழ்நாட்டின் அரசியல் சூழலும், போக்கும் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

விஷால் ஆசை: இதற்கிடையே விஷாலும் தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு தொடர்ந்து செய்துவருகிறார். ஆதரவு, வசதியற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, விவசாயிகளுக்கு உதவுவது என தொடர்ந்து அந்தச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாவது வழக்கம். அது பெரும்பாலும் பாராட்டை பெற்றாலும் ஒரு சில சமயங்களில் ஓவர் டோஸ் ஆகி கடுமையான கிண்டலுக்கு உள்ளான சம்பவங்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
விஷால் மக்கள் இயக்கம்: நிலைமை இப்படி இருக்க விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்ததை அடுத்து விஷால் தனது மக்கள் நல இயக்கத்தின் கொடியை அறிமுகப்படுத்தினார். அதில் வித்தியாசம், விவேகம், விடாமுயற்சி என்று வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், 'எதிர்காலத்தில் இயற்கை வேறு முடிவு வைத்திருந்தால் மக்கள் பணி ஆற்ற தயாராக இருக்கிறேன்’ என்று கூறினார். அதனை படித்த பலரும், விஷால் விரைவில் அரசியல் கட்சியை தொடங்கவிருக்கிறார் என்று பேச ஆரம்பித்தனர்.

விஷால் பேச்சு: இந்நிலையில் விஷால் அரசியலுக்கு வருவது உறுதியாகியிருக்கிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது செல்லமே திரைப்படம் வெளியானபோது சில திரையரங்குகள் இருந்தன. பூஜை படம் வெளியாகும்போது மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் இருக்கின்றன. இன்று ஒரு திரையரங்குக்கு சென்றால் ஆறு முதல் ஏழு படங்கள் திரையிடப்படுகின்றன. உங்களுக்கு எது வேண்டுமோ பார்த்துக்கொள்ளலாம். ஓடிடியில் அனைத்து தரப்பு படங்களையும் மக்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஏமாற்ற முடியாது: அவர்களை இனி ஏமாற்ற முடியாது. அதேபோல் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடுவேன். அந்தத் தேர்தலில் போட்டியிடுபவர்களின் பட்டியல் இருக்கும். அழகான அந்தப் பட்டியலில் மக்கள் தேர்வு செய்வதற்காக நிறைய நல்லவர்கள் இருப்பார்கள். அவர்கள் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம். நிச்சயம் மிகப்பெரிய பட்டியலாக இருக்கும். கண்டிப்பாக 2026ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவேன்" என்றார். முன்னதாக விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். அவரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவது குறிப்பிடத்தக்கது. இப்போது விஷாலும் அரசியல் வருகையை அறிவித்திருப்பதால் அவர் விஜய்க்கு போட்டியாக களமிறங்குகிறாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











