Vishal about Vijayakanth: அண்ணே மன்னிச்சிடுங்கண்ணே.. விஜயகாந்த் மரணம்.. கலங்கித் துடித்த விஷால்!
சென்னை: இன்று காலை 6.10 மணியளவில் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்தது ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி உள்ளது. தமிழ் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்களை தாண்டி பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அரசு மரியாதையும் என்னுடைய நண்பர் விஜயகாந்த் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னைக்கு விரைந்து வருவதாக தகவல்கள் வெளியாகின. கமல்ஹாசன் தனது அன்பு சகோதரரின் மறைவு மீளாத்துயரில் ஆழ்த்தியிருப்பதாக பதிவிட்டுள்ளார். இந்நிலையில், நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி உள்ளார்.

விஜயகாந்த் காலமானார்: கடந்த சில ஆண்டுகளாகவே சர்க்கரை வியாதியால் அவதியுற்று வந்த விஜயகாந்த் பழையபடி அரசியலில் முழு கவனத்தை செலுத்த முடியாமல் முடங்கிக் கிடந்தார். மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், சமீபத்தில் தான் மியாட் மருத்துவமனையில் கிட்டத்தட்ட ஒரு மாத சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். தேமுதிக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று தனது மனைவி பிரேமலதா விஜயகாந்தை தலைவராக்கினார். போண்டா மணி உயிரிழந்த செய்தி அறிந்ததும் அவரது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவிடப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 6.10 மணியளவில் அவரது உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளனர். நாளை மாலை 4.30 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் கூறியுள்ளனர்.

விஷால் அழுகை: அமெரிக்காவின் தலைநகர் நியூயார்க்கில் தனது சொந்தங்களுடன் புத்தாண்டை கொண்டாடி வரும் விஷால் விஜயகாந்தின் மறைவு செய்தி அறிந்து கண்ணீர் மல்க கதறி அழுது தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அண்ணே மன்னிச்சிடுங்க, இந்த நேரம் நான் அங்க உங்க பக்கத்துல இருந்திருக்கணும். எனக்கு இப்படியெல்லாம் ஆகும்னு தெரியாது, வெளிநாட்டுக்கு வந்தது என் தப்பு தான் மன்னிச்சிடுங்க அண்ணே என கதறியபடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உங்களை போல உதவுவேன்: பல பேருக்கு உதவி செய்திருக்கீங்க, உங்க கட்சி ஆபிஸுக்கு பசியோட யார் வந்தாலும் சாப்பாடு போடுவீங்கன்னு பல வருஷத்துக்கு முன்னாடியே கேள்விப்பட்டிருக்கேன். நடிகர் சங்கத் தலைவராக நீங்க இருந்து எப்படி செயல்பட்டீங்களோ அதே போல செயல்படவே நானும் ஆசைப்பட்டேன். உங்களை போலவே என்னால முடிஞ்ச உதவியை நானும் சில பேருக்கு செய்வதற்கு இன்ஸ்பிரேஷனே நீங்க தான் அண்ணே.. உங்களை கடைசியா பார்க்க முடியலையேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு, உங்க ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கிறேன் என விஷால் உருக்கத்துடன் கண்ணீர் மல்க பேசிய வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











