நான் நடிப்பதை யாரும் தடுக்க முடியாது.. தயாரிப்பாளர் சங்கத்தின் எச்சரிக்கை.. விஷால் போட்ட பதிவு!
சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் இருந்தபோது 12 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடி செய்திருப்பதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் ஒரு மனதாக விஷாலுக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தயாரிப்பாளர் சங்கம் மூலம் அறிக்கையாக அது வெளியானது.
இந்நிலையில், நடிகர் விஷால் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அதுதொடர்பான விளக்கத்தையும் தனது நிலைப்பாட்டையும் அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், சினிமாவில் இருந்து தன்னை யாரும் ஒதுக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.

செல்லமே படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஷால் சண்டக்கோழி, தாமிரபரணி, திமிரு என பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார். கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என அனைத்து சங்கத்திலும் ஆக்டிவாக செயல்பட்டு வந்த விஷால் தற்போது நடிகர் சங்க பொதுச்செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பு நிறுவனம்: நடிப்பதை தாண்டி விஷால் பிலிம் ஃபேக்டரி என்பதை உருவாக்கி தயாரிப்பு நிறுவனத்தையும் விஷால் நடத்தினார். தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் தேர்வானார். அவர் சங்கத் தலைவராக செயல்பட்டு வந்த போது ஏகப்பட்ட முறைகேடுகள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் பின்னர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க செயற்குழுவில் விஷாலுக்கு ரெட் கார்டு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
12 கோடி மோசடி: “கடந்த 2017-2019 ஆம் ஆண்டு வரை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த விஷால், மீது எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக சங்கத்திற்கு புதிதாக ஒரு அதிகாரியைத் தமிழக அரசு நியமித்திருந்தது. அவர் சங்கத்தின் கணக்கு வழக்குகளைப் பார்க்க ஸ்பெஷலாக அதிகாரிகளையும், ஆடிட்டர்களையும் நியமனம் செய்திருந்திருந்தார். அந்த ஆடிட்டர்கள் கணக்கு வழக்குகளை சரிபார்த்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
விஷால் மீது குற்றச்சாட்டு: அதில் விஷால் தலைவராக இருந்த சமயத்தில், சங்க நிதியை தவறான முறையில் பயன்படுத்தியிருப்பதாகவும் வரவு - செலவில் சுமார் ரூ.12 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர். முறைகேடாக பயன்படுத்திய அந்தத் தொகையை சங்கத்திற்கு திருப்பி கொடுக்க சொல்லியும் விஷால் பதிலளிக்காத காரணத்தால், இனிவரும் காலங்களில் அவரை வைத்து படம் தயாரிக்கவுள்ளவர்கள் சங்கத்தில் கலந்தாலோசித்த பிறகுதான் படத்திற்கான பணிகளை தொடங்க வேண்டும்” எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது அதற்கு விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

விஷால் விளக்கம்: தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தான் இருந்தபோது செலவு செய்யப்பட்ட பணம் அனைவரது ஆலோசனைப்படியே கொடுக்கப்பட்டது என்றும் உங்கள் அணியில் இருக்கும் கதிரேசன் என்பவருக்கும் அது நன்றாகவே தெரியும். அந்த பணம் எல்லாம் நலிந்த தயாரிப்பாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்குமே செலவு செய்யப்பட்டது என விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
விஷாலை தடுக்க முடியாது: மேலும், உங்களுடைய வேலையை ஒழுங்கா பாருங்க, இரட்டை வரி வசூல் முறை, தியேட்டர் பராமரிப்பு கட்டணம் என ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளன. அதையெல்லாம் ஒழுங்குப்படுத்துங்கள் என விஷால் கூறியுள்ளார். விஷால் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டு தான் இருப்பார். என்னை யாராலும் தடுக்க முடியாது என்றும் உறுதியாக கூறியுள்ளார் விஷால்.


Click it and Unblock the Notifications











