படுக்கைக்கு கூப்பிட்டா செருப்பால அடிங்க.. தமிழிலும் கமிட்டி.. விஷால் உறுதி.. கோலிவுட்டில் அடுத்த புயல்?
சென்னை; சினிமாவில் நடிகைகளுக்கு காலங்காலமாக பாலியல் தொல்லைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. மலையாளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஹேமா கமிஷனின் அறிக்கையும் இந்திய திரையுலகில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. இந்தச் சூழலில் தமிழிலும் அவ்வாறான கமிட்டி அமைக்கப்பட வேண்டுமென்று தொடர்ந்து குரல்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் தமிழிலும் விரைவில் ஒரு கமிட்டி அமைக்கப்படும் என்று நடிகர் விஷால் தெரிவித்திருக்கிறார்.
இந்திய திரையுலகில் கடந்த சில நாட்களாக தலைப்பு செய்தி என்றால் அது ஹேமா கமிஷன். சில வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்துலுக்கு ஆளானார். அதில் பிரபல நடிகர் திலீப் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். நடிகைக்கு நடந்த அந்த குரூர சம்பவத்துக்கு பிறகு அமைக்கப்பட்டது ஹேமா கமிஷன். ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் அமைக்கப்பட்ட அந்த கமிஷன்; திரைத்துறையில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரித்தது.

திடுக்கிடும் தகவல்கள்: 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அந்த கமிஷன் 2019ஆம் ஆண்டு கேரள அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. ஆனால் அதற்கு பிறகும் அறிக்கை வெளியிடப்படவில்லை. சூழல் இப்படி இருக்க கேரளாவை சேர்ந்த ஐந்து பேர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அந்த அறிக்கையை பெற்று வெளியிட்டிருக்கின்றனர். தனி நபர் தகவல்கள் வெளியே தெரியாதவண்ணம் வெளியான அறிக்கையின் அம்சத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
பலர் குற்றச்சாட்டு: அதாவது பல நடிகைகள் தங்களுக்கு பாலியல் தொல்லை நடந்திருப்பதாகவும்; அட்ஜஸ்ட்மெண்ட் என்பது மலையாள திரையுலகில் தவிர்க்கவே முடியாததாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். இதனையடுத்து கேரள திரையுலகின் AMMA அமைப்பிலிருந்து மோகன் லால் உள்ளிட்டோர் கூண்டோடு ராஜினாமா செய்திருக்கிறார்கள். முக்கியமாக மோகன் லால், மம்மூட்டி போன்ற மூத்த நடிகர்கள் ஏன் இந்த விஷயத்தில் இன்னமும் அமைதி காக்கிறார்கள்? மோகன் லால் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற பல கேள்விகள் எழுந்திருக்கின்றன.
தமிழிலும் உண்டு: ஹேமா கமிஷனின் அறிக்கை இந்திய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. சூழல் இப்படி இருக்க தமிழ் சினிமா மட்டும் என்ன ஒழுங்கா? இங்கும் நடிகைகளுக்கும், துணை நடிகைகளுக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்னை இருந்துகொண்டுதான் இருக்கிறது. இதை யார் தடுப்பது போன்ற குரல்களும் ஓங்கி ஒலிக்க தொடங்கியிருக்கின்றன. எனவே அடுத்த புயல் தமிழ் சினிமா துறையில் கிளம்புவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக திரை ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
விஷால் பேட்டி: இந்நிலையில் நடிகர் விஷால் இந்த விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "எவனோ ஒருவன் பெண்ணை மதிக்காமல் பைத்தியக்காரத்தனமாக அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு கூப்பிடுவான். இதையெல்லாம் தவிர்க்க ஒரே வழி என்னவென்றால் அந்தப் பெண்ணுக்கு மன தைரியம் வேண்டும். அப்படி கூப்பிடுபவனை அந்தப் பெண் செருப்பால் அடிக்க வேண்டும். தமிழ்நாட்டிலும் நடிகர் சங்கம் சார்பாக 10 பேர் கொண்ட கமிட்டியை அமைக்கிறோம். அதற்கான வேலைகள் போய்க்கொண்டிருக்கின்றன. அறிவிப்பு கூடிய விரைவில் வரும். அது எங்களது கடமை. நடிகர் சங்கம் ஆண்களுக்கானது மட்டுமில்லை. பெண்களுக்குமானதுதான்"”என்றார்.


Click it and Unblock the Notifications











