விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர்களை சிலர் தூண்டிவிட்டுள்ளனர்: கதிரேசன்
சென்னை: விஷால் எந்த தவறும் செய்யவில்லை, அவர் பதவி விலக மாட்டார் என்று தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கதிரேசன் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் யாரையும் மதிப்பது இல்லை, தரக்குறைவாக பேசுகிறார், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று கூறி சென்னை தி. நகர், அண்ணாசாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களுக்கு சில தயாரிப்பாளர்கள் பூட்டு போட்டுள்ளனர்.

சாவியை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் போவதாக கூறியுள்ளனர். சங்கத்தின் வைப்பு நிதி ரூ. 7 கோடியை விஷால் என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கதிரேசன் கூறியதாவது,
சுயநலத்துடன் சிலர் தூண்டிவிட்டுள்ளதால் போராட்டம் செய்கிறார்கள். விஷால் தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அவருக்கு டைம் கொடுக்காமல் எப்படி அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றச் சொல்வது.

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை தள்ளி வைக்கவோ, பொதுக்குழுவை கூட்டாமல் தடுக்கவோ விஷால் முயற்சி செய்யவில்லை. வரும் பிப்ரவரி மாதம் பொதுக்குழுவை கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்ங்கள் சங்கத்தில் அனைத்தும் முறைப்படி தான் நடக்கிறது. சங்க பணத்தை யாரும் கையாடவில்லை. கணக்கு சரியாக உள்ளது.
விஷால் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. அடுத்த ஆண்டு தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நடக்கும். தயாரிப்பாளர்கள் சங்க கட்டிடங்களுக்கு பூட்டு போட்டது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றார்.


Click it and Unblock the Notifications











