மீண்டும் எனிமி தயாரிப்பாளருடன் இணையும் விஷால்... ஆதிக் இயக்கத்தில் உருவாகும் படம்!
சென்னை : நடிகர்கள் விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த தீபாவளியையொட்டி வெளியான படம் எனிமி. இந்த படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றிருந்தது. ஆனந்த் ஷங்கர் இந்த படத்தை இயக்கியிருந்தார். வினோத்குமார் தயாரிப்பில் படம் சிறப்பாக வெளியானது.

தயாரிப்பாளருக்கு பாராட்டு
முன்னதாக படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஆர்யா மற்றும் விஷால் இருவரும் தயாரிப்பாளர் வினோத்குமாரை புகழ்ந்து தள்ளினர். படத்திற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் அவர் சிறப்பாக வழங்கியதாக குறிப்பிட்டிருந்தனர். மேலும் மலேசியா உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அதற்காக மூன்று மடங்கு பணத்தை செலவழித்து சூட்டிங்கிற்கு ஏற்பாடு செய்து தந்ததாகவும் குறிப்பிட்டனர்.

மீண்டும் இணையும் கூட்டணி
இந்நிலையில் விஷால் அடுத்ததாக தயாரிப்பாளர் வினோத்குமார் உடன் அடுத்த படத்திற்காக இணைந்துள்ளார். தற்போது இந்தக் கூட்டணி அதிகாரபூர்வமாக தங்களது இணைப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கம்
இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துவங்க உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

விஷால் மகிழ்ச்சி
மேலும் படத்தின் நடிகர், நடிகையர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கூட்டணி குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஷால் அறிவித்துள்ளார். உடன் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார். படம் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புகைப்படம் பகிர்ந்த விஷால்
இந்த தகவலை பகிர்ந்துள்ள விஷால், வினோத் மற்றும் ஆதிக் உடன் தான் உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்தப்படம் விஷாலின் 33வது படமாக அமைய உள்ளது. விஷாலின் லத்தி உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக ஆதிக் மற்றும் வினோத்குமார் உடன் இணைந்துள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











