மசாலா வீடியோ வெளியிட்ட விஷால்: கோபத்தில் விஜயகாந்த் ஆதரவாளர்கள்
சென்னை: நடிகர் சங்க தேர்தலுக்கு முன்பு விஷாலின் பாண்டவர் அணி வீடியோ எல்லாம் வெளியிட்டுள்ளது.
நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் அடங்கிய பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகிறது.
இந்நிலையில் உண்மை வெல்லும் என்று கூறி விஷால் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
வீடியோ
அந்த வீடியோவில் நாசமாக போன நடிகர் சங்கத்தை பாண்டவர் அணி பதவிக்கு வந்த பிறகு தான் நல்ல நிலைக்கு கொண்டு வந்ததாக காட்டியுள்ளனர். நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோரை ஊழல் பெருச்சாலிகள் போன்று சித்தரித்துள்ளனர். மேலும் பாண்டவர் அணி கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிவிட்டதாம்.

பாண்டவர் அணி
பாக்யராஜ் நாடக கலைஞர்கள் பற்றி கூறிய கருத்தை பாண்டவர் அணி திரித்து பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் நாடக கலைஞர்களின் ஆதரவு பாண்டவர் அணிக்கே என்பது போன்று அந்த வீடியோவில் காட்டியுள்ளனர். பாண்டவர் அணி பதவிக்கு வந்த பிறகே நாடக கலைஞர்கள் நிம்மதியாக இருப்பது போன்று காண்பித்துள்ளனர்.

மசாலா படம்
தேர்தலுக்கு இப்படி ஒரு குறும்படம் வெளியிட்டது நீங்க தான் விஷால் என்று நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள். விஷால் வெளியிட்ட வீடியோவில் மகிழ்ச்சி, கோபம், கவலை, டான்ஸ், இசை, முன்னேற்றம், நல்ல முடிவு என்று ஒரு மசாலா படத்தில் இருக்க வேண்டிய அனைத்தும் உள்ளது. வீடியோவில் அனைவரையும் காட்டியிருக்கிறீர்களே உண்மையிலேயே மோசமான நிலையில் இருந்த நடிகர் சங்கத்தை நல்ல நிலைக்கு கொண்டு வந்த கேப்டன் விஜயகாந்தை மட்டும் ஏன் காட்டவில்லை.
விஜயகாந்த்
பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் விஜயகாந்தை நேற்று சந்தித்து பேசினார்கள். தங்கள் அணிக்கு ஆதரவளிப்பதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார் என்று அவர்கள் கூறினார்கள். அதற்காக அவரை வீடியோவில் சேர்க்கவில்லையா விஷால் என்று கேப்டன் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பாண்டவர் அணி பதவிக்கு வரும் முன்பே தனது முயற்சியால் நடிகர் சங்கத்தை ஒழுங்குபடுத்தியவர் விஜயகாந்த் என்பதை மறக்க வேண்டாம்.

விஷால்
வீடியோவில் நாடக கலைஞர்களுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. விஷாலின் பாண்டவர் அணி நாடக கலைஞர்களை பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணிக்கு எதிராக தூண்டிவிட்டது போன்று உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் நாள் அன்று வாக்குச்சாவடியில் டிராமா நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லரே இப்படி என்றால் மெயின் பிக்சர் எப்படி இருக்குமோ?


Click it and Unblock the Notifications











