எங்கிட்டையும் தப்பு இருக்கு.. ஆனால் இனிமேல் நாம் போகும் பாதை.. விஷாலின் இந்த பேச்சைப் பாருங்க
சென்னை: நடிகர் விஷால் தனது ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவர்களுடன் உரையாடி உள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தனது ரசிகர்களை அவ்வப்போது சந்தித்து அவர்கள் செய்யும் நற்பணிகளை ஊக்குவித்து, அவரகளை மேலும் சிறப்பாக இயங்க சொல்லி ஊக்குவிப்பவர் விஷால். அப்படி இருக்கையில் தனது ரசிகர்களைச் சந்தித்த அவர், பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " என்னிடத்திலும் சில தவறுகள் இருக்கிறது. ஆனால் அவற்றை எல்லாம் நான் சரி செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக, ஒரு நடிகராக இத்தனை ஆண்டுகள் சினிமா உலகில் இருந்த நான் இந்த வயதிலும், ஒரு குற்ற உணர்ச்சியில் இல்லாமல் ஒரு நல்ல உணர்ச்சியில் கூறுகிறேன், இனிமேல் நாம் போகக்கூடிய பாதை என்பது சாதாரண பாதை கிடையாது.

கூட நிற்கிறேன்: அது நேர் பாதை. குறுக்குப் பாதை கிடையாது. நாம் நேர் பாதையில் செயல்படும் போது, எல்லா வகையிலும் நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்" என்று பேசி உள்ளார். இவரது இந்த பேச்சு அரசியல் செயல்பாடுகள் குறித்துதான் என்று இணையவாசிகள் பதிவிட்டு வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் நடிகர் விஷாலும் ஒருவர். இவர் ஒரு காலத்தில் எங்கு தேர்தல் வைத்தாலும் போட்டியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறாரே என்று விமர்சிக்கப்பட்டார். காரணம், ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல், நடிகர் சங்கத் தேர்தல்,தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் என எல்லாவற்றிலும் பங்கெடுத்து வந்தார்.

தேர்தல் பங்கேற்பு: நடிகர் சங்கத் தேர்தல் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் ஆர்.கே. நகர் தொகுதியின் இடைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் தேர்தலில் இவர் போட்டியிட்டது, இவருக்கு அரசியலில் ஆசையும் ஆர்வமும் இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இந்நிலையில் அவ்வப்போது பப்ளிக் ஸ்டண்ட்டுகளையும் செய்து வந்தார். குறிப்பாக கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் இன்றைய முதலமைச்சராக உள்ள, அன்றைக்கு அரசியலில் களமிறங்காத நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார். அதேபோல் விஷாலும் ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சைக்கிளில் சம்பவ இடத்திற்கு வந்தார்.
இது தொடர்பான வீடியோக்கள் வெளியானது. ஆனால் இதைப் பார்த்த இணையவாசிகள் என்னங்க நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருந்து 100 அடிக்கு முன்னால் இருந்து தான் சைக்கிளில் வந்திருப்பாரு போல என்று கமெண்ட் போட்டு கலாய்த்துவிட்டனர். விஷால் தற்போது மகுடம் படத்தின் ரிலீஸ் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் ஒரு பாடல் அண்மையில் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.


Click it and Unblock the Notifications