விஜய் மாநாட்டுக்கு செல்வீர்களா?.. விஷால் கொடுத்த அதிரடி பதில்.. வந்தது முற்றுப்புள்ளி
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடக்கவிருக்கிறது. தமிழ்நாடெங்கிலுமிருந்து விஜய்யின் ரசிகர்கள் விக்கிரவாண்டிக்கு படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இன்று மாலை தங்கள் தளபதி என்ன பேசப்போகிறார் என்பதை கேட்பதற்கு ஆவலோடு இருக்கிறார்கள். மேலும் திரைத்துறையிலிருந்து யார் யார் இந்த மாநாட்டுக்கு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. இந்தச் சூழலில் விஷால் கூறியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சி போட்டியிடவில்லை. அதேசமயம் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக போட்டியிடவிருக்கிறது. அரசியல் கட்சியாகவும் தவெகவை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவும் செய்திருக்கிறது. எனவே தங்கள தளபதியை எப்படியாவது கோட்டைக்குள் அனுப்பிவிட வேண்டும் என்பதில் அவரது தொண்டர்கள் முழு மூச்சாக இருக்கிறார்கள்.

தளபதி 69 படம்: இதற்கிடையே தான் அரசியலுக்கு வருவதால் சினிமாவுக்கு ஒட்டுமொத்தமாக முழுக்கு போட்டிருக்கிறார் விஜய். ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 69ஆவது படத்தில் கமிட்டாகியிருக்கிறார். அதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். அதன் பூஜை சமீபத்தில்தான் நடந்து முடிந்தது. அரசியலுக்கு விஜய் வருவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் சினிமாவிலிருந்து அவர் ஒதுங்குவது அவர்களுக்கு கொஞ்சம் சோகத்தையே கொடுத்திருக்கிறது.
திரைத்துறையிலிருந்து ஆதரவு: அதேசமயம் விஜய்யின் படங்கள் இப்போது அசால்ட்டாக 500 கோடி ரூபாய்வரை வியாபாரம் செய்கின்றன. அவருக்கு ஒரு படத்த்க்கு 200 கோடி ரூபாய்வரை சம்பளமாகவும் வழங்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இப்படி உச்சக்கட்ட வியாபாரத்தையும், சம்பளத்தையும் விட்டுவிட்டு அவர் அரசியலுக்கு எண்ட்ரி கொடுத்திருப்பதை சமுத்திரக்கனி, கார்த்திக் உள்ளிட்டோர் பலமாகவே வரவேற்றிருக்கிறார்கள். அநேகமாக திரைத்துறையிலிருக்கும் பலர் தவெகவில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாநாடு: தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெறவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்திருக்கின்றனர். தமிழ்நாடெங்கும் இருக்கும் விஜய் ரசிகர்கள் இன்று மாநாட்டுக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். மேலும் தமிழ்நாட்டில் இருக்கும் பிற அரசியல் கட்சியினரும் இன்றைய தவெக மாநாட்டினை உற்று நோக்கி காத்திருக்கிறார்கள். தனது அரசியல் பாதை என்ன, திட்டம் என்ன என்பவற்றை விஜய் இன்று தெளிவுப்படுத்துவார் என்று நம்பலாம்.
விஷால் கருத்து: இந்நிலையில் இன்றைய தவெக மாநாடு பற்றி நடிகர் விஷால் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், “நான் விஜய்யின் மாநாட்டுக்கு செல்வேன் என்று கூறியிருந்தேன். ஆனால் செல்லப்போவதில்லை. இருந்தாலும் ஒன்று அரசியலைப் பொறுத்தவரை விஜயகாந்த்துக்கு பிறகு விஜய்க்குதான் எதிர்பார்ப்பு அதிகளவில் இருக்கிறது” என்றார். இதற்கிடையே நடிகர் ஜீவாவும் வாய்ப்பு இருந்தால் விஜய்யின் மாநாட்டுக்கு செல்வேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











