நடிகர் சங்க தேர்தல் ரத்து.. ஹைகோர்ட்டில் முறையீடு செய்தது பாண்டவர் அணி!
சென்னை: நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்தது தொடர்பாக பாண்டவர் அணியினர் சென்னை ஹைகோர்ட்டில் முறையீடு செய்துள்ளனர்.
நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் விஷாலின் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நடிகர் நாசரும், சங்கர்தாஸ் அணியின் சார்பில் பாக்யராஜ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

இதற்கான வாக்கு சேகரிப்பில் இரு அணியின் நிர்வாகிகளும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ஆனால் உறுப்பினர்கள் சேர்க்கை, மற்றும் பாதுகாப்பு குளறுபடிகள் காரணமாக நடிகர் சங்க தேர்தலை மாவட்ட பதிவாளர் ரத்து செய்து நேற்று உத்தரவிட்டார்.
நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்ட விவகாரம் இரு அணி நிர்வாகிகளிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்தது தொடர்பாக விஷால் அணியினர் இன்று சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தனர்.
அப்போது சங்கங்களின் மாவட்ட பதிவாளரின் உத்தரவை ரத்து செய்ய அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக எடுக்க நீதிபதி ஆதிகேசவலு மறுப்பு தெரிவித்தார். மனுவாக தாக்கல் செய்தால் வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதி ஆதிகேசவலு தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











