Mark Antony: 100 கோடி வசூல்.. விஜய்க்கு நன்றி.. மார்க் ஆண்டனி சக்சஸ் மீட்டில் தெறிக்கவிட்ட விஷால்!
சென்னை: Vishal (விஷால்) - ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, சுனில், ரிது வர்மா மற்றும் அபிநயா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்டி இருப்பதாக நடிகர் விஷால் சக்சஸ் மீட்டில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் படம் ஆரோக்கியமாக தொடங்க காரணமாக இருந்த எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய்க்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என பேசியுள்ளார். மேலும், என்னுடைய நண்பர் கார்த்தி மார்க் ஆண்டனி படத்திற்கு குரல் கொடுத்திருந்தார். ஆரம்பத்தில் கார்த்தியிடம் கேட்கவே ரொம்பவே தயங்கினேன், இதெல்லாம் ஒரு மேட்டரா நாளைக்கே வந்து பேசுறேன் என்னை செம கூலாக சொல்லிட்டு வந்து பேசிய அவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

மார்க் ஆண்டனி திரைப்படத்தில் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த குருவாக எஸ் ஜே சூர்யா மாறிவிட்டார். சூட்டிங் ஸ்பாட்டிலேயே அவர் நடிக்கிற ஒவ்வொரு சீனையும் அப்படிப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தேன். அதிலும் அந்த சில்க் ஸ்மிதா சீன் நான் அன்னைக்கு இல்ல, அடுத்த நாள் வந்து அந்தக் காட்சியைப் போட்டு பார்த்து விழுந்து விழுந்து சிரித்தேன்.
சத்யம் தியேட்டர்ல ₹10 டிக்கெட்ல படம் பார்த்து இருக்கேன், ரோகிணி தியேட்டர்ல ரசிகர்களோட ரசிகரா படம் பார்த்து இருக்கேன். அவங்களுக்கு நிச்சயமா இந்த சீன் பிடிக்கும் என நினைத்தேன். அதேபோல தியேட்டரில் அந்த காட்சியை அப்படி கொண்டாடி விட்டனர்.
ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒரு ரூபாயை விவசாயிகளுக்கு கொடுப்பதாக அறிவித்துள்ளேன். அதை கண்டிப்பா செய்வேன். ஒன்பது வருஷமா சினிமாவுல இருக்கேன். இதில் பலமுறை தோல்வியை தழுவினாலும் மீண்டும் எழுந்து வந்திருக்கிறேன். அதற்கு காலம் என்னுடைய ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர் நண்பர்கள் தான்.

இந்த படத்துக்கு டி ராஜேந்தர் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த வயசுல அவருக்கு இருக்க எனர்ஜி எல்லாம் எங்களுக்கு வருமானம் சத்தியமா கிடையாது. சில்க் ஆக இந்த படத்தில் நடித்த விஷ்ணுபிரியா மற்றும் அவரை முழுவதுமாக சில்க்காக திரையில் காட்டிய விஎஃப்எக்ஸ் கலைஞர் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சினிமா என்பது எல்லோருக்கும் ஆனது. இதில் யாரையும் யாரும் தடுக்க முடியாது. கண்டிப்பா தொடர்ந்து இதேபோல நல்ல படங்களை என்னோட ரசிகர்களுக்காக கொடுப்பேன். தயவுசெஞ்சு என்னோட கல்யாணத்தைப் பத்தி கிசுகிசு எல்லாம் எழுதாதீங்க.. என்னை பத்தி என்ன வேணா எழுதுங்க.. எந்த ஒரு நடிகையின் வாழ்க்கையும் தேவையில்லாமல் வீணாக்க வேண்டாம். எனக்கு கண்டிப்பா கல்யாணம் நடக்கும் அது முடிவா ஆயிடுச்சின்னா உங்களுக்கு நானே சொல்லிடுவேன் என மார்க் ஆண்டனி சக்சஸ் மீட்டில் நடிகர் விஷால் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











