அஜித் படம் வராததால் விஷாலுக்கு வந்த தைரியம்.. வரலட்சுமி சரத்குமாருடன் நடித்த படம் பொங்கலுக்கு ரிலீஸ்
சென்னை: அஜித் குமாரின் விடாமுயற்சி படம் பொங்கல் போட்டியில் இருந்து ஒதுங்கிய நிலையில், கேம் சேஞ்சர் படத்துக்கு தமிழ் நாட்டில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நினைத்துக் கொண்டிருந்த ஷங்கரின் கனவில் மண்ணை அள்ளிப் போடும் அளவுக்கு 10க்கும் மேற்பட்ட தமிழ் படங்கள் வரும் பொங்கல் பண்டிகையை டார்கெட் செய்து தியேட்டர்களை நிரப்ப காத்திருக்கின்றன.
விடாமுயற்சி படம் வருகிறது என்கிற அறிவிப்பால் விக்ரமின் வீர தீர சூரன், சூர்யாவின் ரெட்ரோ உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் தள்ளி வைத்த நிலையில், கடைசி நேர மாற்றம் காரணமாக அந்த படங்கள் வர முடியாமலே போய் விட்டது.

ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை, பாலாவின் வணங்கான் படங்களுடன் சிபிராஜின் 10 ஹவர்ஸ், விஜயகாந்த் மகனின் படை தலைவன் உள்ளிட்ட பல படங்கள் மோதுவதாக அறிவித்துள்ளன. இந்நிலையில், பல ஆண்டுகளாக ரிலீஸ் பிரச்சனையுடன் கிடப்பில் கிடந்து வந்த மத கஜ ராஜா படத்தை இந்த பொங்கலுக்கு களமிறக்கப் போவதாக சந்தானம் அறிவித்துள்ளார்.
விஷால் - வரலட்சுமி சரத்குமார்: காதல் பறவைகளாக விஷால் மற்றும் வரலட்சுமி சரத்குமார் சுற்றிக் கொண்டிருந்ததாக இந்த படத்தில் இருவரும் நடிக்கும் போதுதான் கடந்த 2012ம் ஆண்டு கிசுகிசுக்கள் கிளம்பின. 2013ம் ஆண்டே சுந்தர். சி இயக்கத்தில் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து ரிலீஸ் ஆக காத்துக் கிடந்த நிலையில், அந்த படத்தின் தயாரிப்பாளர் கடன் பிரச்சனை காரணமாக படத்தை ரிலீஸ் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டார்.
பொங்கல் ரேஸில் விஷால்: சுந்தர். சி இயக்கத்தில் விஜய் ஆண்டனி இசையில் விஷால், வரலட்சுமி சரத்குமார், சந்தானம், அஞ்சலி, சோனு சூட், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கலர்ஃபுல்லான காமெடி படமான மத கஜ ராஜா இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகப்போவதாக சற்றுமுன் நடிகர் சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ரிலீஸ் தேதி எப்போ?: மத கஜ ராஜா படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை தாங்கள் கேட்டும் தயாரிப்பாளர் தர மறுக்கிறார் என விஷால் மற்றும் சுந்தர். சி அளித்த பேட்டிகளில் கூறி வந்த நிலையில், தற்போது அந்த படம் வெளியாகப் போகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி மத கஜ ராஜா தியேட்டர்களில் வெளியாகிறது.
அஞ்சலிக்கு டபுள் தமாக்கா: நடிகை அஞ்சலிக்கு இந்த பொங்கல் பண்டிகையில் 2 படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. கேம் சேஞ்சர் படத்தில் அப்பா ராம்சரணுக்கு மனைவியாக அஞ்சலி நடித்துள்ளார். மத கஜ ராஜா படத்தில் விஷாலுக்கு ஜோடியாகவும் இவர் நடித்திருக்கிறார். கலகலப்பு படத்தில் பார்த்த அஞ்சலியை ரசிகர்கள் மீண்டும் பார்க்க உள்ளனர். சந்தானத்தின் கலக்கல் காமெடியையும் இந்த பொங்கலுக்கு ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அரண்மனை 4 படத்தைத் தொடர்ந்து சுந்தர். சிக்கு இந்த படம் வெற்றிப் படமாக அமையுமா? அல்லது சுமார் 12 வருடங்கள் தாமதமாக வெளியாவதால் படத்தின் ரிசல்ட் படுத்துவிடுமா என்பது படம் வெளியானால் தான் தெரியவரும். இந்த பொங்கலுக்கு ஜாலியாக பார்க்க ஒரு படம் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











