வேணாம் வேற மாதிரி ஆயிடும்… பயில்வானின் கேள்வியால் கடுப்பான விஷால்!
சென்னை: தாமிரபரணி, பூஜை படங்களுக்குப் பிறகு ஹரி இயக்கத்தில் விஷால் மூன்றாவது முறையாக கூட்டு சேர்ந்து இருக்கும் திரைப்படம் ரத்னம். இத்திரைப்படம் வரும் 26ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், பயில்வான் ரங்கநாதன் கேட்ட கேள்வியால் கடுப்பான விஷால், அவருக்கு நான் பதில் சொல்ல மாட்டேன், வேணாம் வேறமாதிரி ஆகிவிடும் என்றார்.
சிறந்த இயக்குனரான ஹரி கடைசியாக யானை திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக இயக்குனர் ஹரி விஷாலை வைத்து ரத்னம் எனும் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து இருக்கிறார்.

ரத்னம் திரைப்படம்: மேலும், விஷால் உடன் , சமுத்திரக்கனி, யோகிபாபு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படம் ஏப்ரல் 26-ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
விஷால் பேச்சு: இந்நிலையில் ரத்னம் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் செய்தியாளர்கள், ஒருமுறை நீங்கள் சின்ன தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்க வேண்டாம் என்று சொன்னீங்க இப்போது, சிறு படங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று சொல்ல என்ன காரணம் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த விஷால், சிறு தயாரிப்பாளர்கள் யாருடைய துணையும், அறிவுரையும் இல்லாமல் பணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு படம் தயாரித்து பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார்கள். இதனால், ஒரு படத்தை தயாரிக்கும் போது ஓடிடியில வாங்குவாங்களா, சேட்டிலைட் ரைட்ஸ் வாங்குவாங்களா என அனைத்தையும் நல்ல தெரிந்து கொள்ள வேண்டும்.
நாலு கோடி நஷ்டம்: நானும் சின்ன படத்தை தயாரித்து இருக்கிறேன், ஜீவா என்ற படத்தை தயாரித்தேன், படம் வெளியாகும் போது, ஜெயலலிதா அம்மா கைது செய்யப்பட்டார்கள், எல்லா தியேட்டரையும் மூடுங்க என்று சொன்னார்கள் அவ்வளவுதான் என் காசு போச்சு, நாலு கோடி போச்சு, சினிமாவில் எல்லாமே இருக்கும். இதனால், சிறு திரைப்பட தயாரிப்பாளர்கள் சினிமாவிற்குள் வரும் போது நன்றாக யோசித்துவிட்டு வாருங்கள் என்றார். மேலும், இந்த ஆண்டு இந்திய சினிமாவிற்கு ரொம்ப தேவையான விஷயம், பொறுமை, பொறுமையோடு இருக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் அடுத்த ஆண்டு நிச்சயம் ஜெயிப்பார்கள் என்றார்.
வேற மாதிரி ஆகிவிடும்: இதையடுத்து, சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு இந்த இரண்டு படமும் சின்ன படம் தானே நல்ல கதை இருந்ததால் படம் ஓடுச்சு என்று கேள்வி எழுப்பினார். பயில்வானின் இந்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த விஷால், சத்தியமாக அவரோட இந்த கேள்விக்கு பதிலளிக்க மாட்டேன். இந்த செய்தியாளர் சந்திப்பு ஆரோக்கியமாக போய்க்கொண்டு இருக்கு, இதுல என்னை ஒரு பொதுச்செயலாளராக பேசவெச்சிடாதீங்க, அவருக்கு நான் வெளியில் பதில் சொல்கிறேன். இங்க வேணாம் வேற மாதிரி ஆயிடும் என்று நடிகர் விஷால் கடும் கோவத்தில் பேசினார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விஷால், சமுத்திரக்கனி,இயக்குநர் ஹரி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











