Mark Antony - லியோ, சலார் படங்களை முந்திய மார்க் ஆண்டனி.. மாஸ் காட்டுறாரே விஷால்
சென்னை: Mark Antony (மார்க் ஆண்டனி) மார்க் ஆண்டனி படம் ஒரு விஷயத்தில் லியோ, சலார் ஆகிய படங்களை முந்தியிருக்கிறது.
நடிகர் விஷால் பல வருடங்களாகவே ஒரு ஹிட்டுக்கு காத்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லத்தி படம் படுதோல்வியை சந்தித்தது. அவரிடமே சென்று உங்களது கடைசி ஹிட் படம் என்னவென்று கேட்டால் அவருக்கு ஞாபகம் வராத அளவுதான் அவருடைய நிலைமை இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கூறிவருகின்றனர்.

மார்க் ஆண்டனி: இந்தச் சூழலில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்திருக்கிறார் விஷால். அவருடன் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்திலாவது ஒரு ஹிட்டை கொடுத்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் அவர்.
கவனம் ஈர்த்த ட்ரெய்லர்: அதேசமயம் படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது கண்டிப்பாக இந்தப் படம் ஹிட் படமாக அமையும் என்று விஷாலின் ரசிகர்கள் கூறுகின்றனர். தமிழ் சினிமாவில் டைம் ட்ராவலை மையப்படுத்தி இதுவரை வந்த படங்கள் மெகா ஹிட்டாகியிருக்கிறதோ இல்லையோ டீசண்ட்டான வரவேற்பையாவது பெற்றிருக்கின்றன. எனவே மார்க் ஆண்டனியும் அந்த ஜானரில் வருவதால் விஷால் ரசிகர்களிடம் நம்பிக்கை பிறந்திருக்கிறது.
சிக்கல்: இதற்கிடையே பைனான்சியர் அன்புசெழியனிடம் 21 கோடி ரூபாயை விஷால் கடனாக பெற்றார் என்றும் அதை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு விஷால் பிலிம் பேக்டரியுடன் ஒப்பந்தம் போட்டதாகவும் அதை அந்த நிறுவனம் மீறிவிட்டதாகவும் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து மார்க் ஆண்டனி படம் வெளியாவதற்கு தடை விதித்து விஷால் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
அதனையடுத்து நேற்று விஷால் ஆஜராகி விளக்கமளித்தார். தொடர்ந்து மார்க் ஆண்டனி படம் வெளியிடப்படுவதற்கான தடையை நீக்கி உத்தரவிட்டு விஷாலுக்கு சொந்தமான சொத்து விவரங்களை தாக்கல் செய்ய தீர்ப்பளித்து செப்டம்பர் 19ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக திட்டமிட்டபடி செப்டம்பர் 15ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.
முதலிடம்: இந்நிலையில் ஐஎம்டிபி தரவுகளின்படி இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள் பற்றிய பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மார்க் ஆண்டனி படம் முதலிடம் பிடித்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பாக வெளியான மார்க் ஆண்டனி ட்ரெய்லர் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் கேங்ஸ்டர் ப்ளஸ் டைம் ட்ராவல் ஜானரில் படம் உருவாகியிருப்பதால் ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதனால்தான் ஐஎம்டிபியில் முதலிடம் பிடித்திருக்கிறது. அதற்கு அடுத்ததால லியோ படமும், சலார் படமும் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications











