பணமோசடி.. விஷ்ணு விஷால் தந்தைக்கு எதிராக சூரி தொடர்ந்த வழக்கு.. குற்றப்பிரிவுக்கு மாற்றம்!
சென்னை: காமெடி நடிகர் சூரியை ஏமாற்றி நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை பணமோசடி செய்ததாக தொடர்ந்த வழக்கு சரியாக விசாரிக்கப்படவில்லை என நடிகர் சூரி தரப்பில் இருந்து சிபிசிஐடி விசாரணை கோரி புதிய வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் சூரி தரப்புக்கு ஆதரவாக உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சூரி அளித்த பண மோசடி புகாரில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீதான வழக்கின் விசாரணையை சென்னை மத்திய குற்றபிரிவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்றம் விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது.

சூரியிடம் பணமோசடி
சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாக கூறி, நடிகர் சூரியிடம் பணமோசடி செய்ததாக, முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி நடிகர் சூரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சிபிசிஐடி விசாரிக்கணும்
இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது சூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபி என்பதால் அவருக்கு எதிராக விசாரணை நடத்தும் அதிகாரிகள் அவருக்கு சாதகமாக செயல்படுவதாக தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் இது போன்ற பண மோசடி செயல்களில் ஈடுபடக்கூடாது என கருத்து தெரிவித்தார்.

விஷ்ணு விஷால் தந்தை
மேலும், கோடிக்கணக்கில் பண மோசடி நடைபெற்றுள்ளதால் இந்த வழக்கின் விசாரணையை மத்திய குற்றப் பிரிவு காவல்துறைக்கு மாற்றி உத்தரவிடுவதாகவும், துணை ஆணையர் பொறுப்பில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் எனவும், இதனை கூடுதல் ஆணையர் பொறுப்பில் உள்ள அதிகாரி மேற்பார்வையிட வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

குற்றப்பிரிவுக்கு மாற்றம்
அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் குடவாலா மீது புதிதாக விசாரணை நடத்தி அதை ஆறு மாதங்களுக்குள் முடித்து, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார். சூரி தரப்பு எதிர்பார்த்தபடி இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











