செல்ல அய்யாவுவின் நட்பு & விஸ்வாசத்திற்கு விஷ்ணு விஷால் கொடுத்த கார்.. அடேங்கப்பா இத்தனை லட்சங்களா?
சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்த 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. சுமார் ரூ.48 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படும் இந்த படம், விஷ்ணு விஷாலின் கேரியரில் முக்கியமான வெற்றிப் படமாக மாறியுள்ளது. இந்த வெற்றிக்கு நடுவே, இயக்குநர் செல்ல அய்யாவுக்கு விஷ்ணு விஷால் கொடுத்த பரிசு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இயக்குநர் செல்ல அய்யாவு இயக்கத்தில் வெளியான 'கட்டா குஸ்தி 2' படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியிலேயே, அவருக்கு புதிய காரின் சாவியை கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்திருந்தார் விஷ்ணு விஷால். தற்போது அந்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் மீண்டும் பகிர்ந்துள்ள அவர், "கடந்த 11 ஆண்டுகளாக என் வாழ்க்கையின் எல்லா ஏற்றத் தாழ்வுகளிலும் என்னுடன் இருந்துள்ளீர்கள். உங்களுடைய விஸ்வாசம், நம்பிக்கை, நட்பு எல்லாவற்றுக்கும் வார்த்தைகளால் நன்றி சொல்ல முடியாது. இந்த காரில் மிகவும் மகிழ்ச்சியாக பயணம் செய்யுங்கள். இதற்கு முழு தகுதியும் உங்களுக்கு இருக்கிறது" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சினிமாவில் வெற்றி பெற்ற பிறகும், தன்னுடன் ஆரம்பம் முதல் பயணித்த நண்பரை மறக்காமல் கௌரவித்திருப்பதற்காக விஷ்ணு விஷாலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இத்தனை லட்சங்களா?: விஷ்ணு விஷால் பரிசாக வழங்கியிருப்பது டொயோட்டா அர்பன் குரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) எஸ்யூவி கார். இந்த காரின் உயர்நிலை மாடலின் விலை சுமார் ரூ.20 லட்சம் வரை இருக்கும். தனது 11 ஆண்டுகால நண்பரும், இயக்குநருமான செல்ல அய்யாவுக்கு இத்தனை லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வழங்கி தனது நட்புக்கும், விசுவாசத்துக்கும் மரியாதை செலுத்தியிருப்பது பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கட்டா குஸ்தி 2 வெற்றி: இதற்கிடையில், 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தின் வெற்றிக்கும் பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இரண்டாவது பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மோக்ஷாவின் நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமியின் எதார்த்தமான நடிப்பும், படம் வெளியாவதற்கு முன்பும், வெளியான பிறகும் அவர் மேற்கொண்ட தொடர் புரோமோஷன்களும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இப்படி இருக்கையில், ஒரு பக்கம் 'கட்டா குஸ்தி 2' வசூலில் வெற்றி நடைபோட்டு வரும் நிலையில், மறுபக்கம் தனது இயக்குநரின் 11 ஆண்டுகால நட்பு மற்றும் விசுவாசத்திற்கு சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள காரை விஷ்ணு விஷால் பரிசாக வழங்கியிருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications