Vishnu Vishal: விஷ்ணு விஷாலுடன் இணையும் விஜய் சேதுபதி பட இயக்குநர்... ஆக்ஷன் ட்ரீட் கன்ஃபார்ம்
சென்னை: கோலிவுட்டில் இளம் ஹீரோக்களில் ஒருவரான விஷ்ணு விஷால், அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார். அவர் நடித்துள்ள லால் சலாம் இந்த பொங்கலுக்கு வெளியாகவிருந்தது. ஆனால் தற்போது அது பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், விஷ்ணு விஷாலின் புதிய படம் குறித்த அப்டேட் தற்போது அபிஸியலாக வெளியாகியுள்ளது.
விஷ்ணு விஷாலுடன் இணையும் பிரபல இயக்குநர்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு படம் மூலம் அறிமுகமான விஷ்ணு விஷால், சின்ன பட்ஜெட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருவது விஷ்ணு விஷாலின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாகும்.

அதன்படி முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, ராட்சசன், கட்டா குஸ்தி போன்ற சூப்பர் ஹிட் படங்கள் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியுள்ளன. இதன் தொடர்ச்சியாக தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விஷ்ணு விஷாலின் புதிய படம் குறித்த அறிவிப்பு தற்போது அபிஸியலாக வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படத்தை கோகுல் இயக்கவுள்ளார். ரெளத்திரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான கோகுல், அடுத்து விஜய் சேதுபதியின் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் மூலம் பிரபலமானார். இந்தப் படம் விஜய் சேதுபதிக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து கார்த்தி, நயன்தாரா நடித்த காஷ்மோரா, விஜய் சேதுபதியின் ஜுங்கா, அன்பிற்கினியாள் படங்களை இயக்கினார். தற்போது ஆர்ஜே பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் 25ம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து கோகுல் இயக்கும் படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லரில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாம்.
விஷ்ணு விஷாலின் 22வது படமாக உருவாகும் இதனை அவரே தனது சொந்த ஸ்டூடியோ சார்பாக தயாரிக்கிறார். விஷ்ணு விஷால் - கோகுல் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவுடன் புதிய படம் குறித்து அபிஸியலாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











