பில்லாவை விட செம விறுவிறுப்பாய் இருக்கும் ஆரம்பம்! - விஷ்ணுவர்தன்
அஜீத் நடித்த பில்லாவை விட செம விறுவிறுப்பாக ஆரம்பம் படம் வந்திருக்கிறது, ரசிகர்களுக்கு ரொம்பப் பிடிக்கும் இந்தப் படம் என்று இயக்குநர் விஷ்ணு வர்தன் கூறினார்.
அஜீத், ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஆரம்பம்' திரைபடத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது.

முதல் முறை பேட்டி
இதுவரை இப்படம் குறித்து படக்குழுவினர் யாருமே வாய்திறக்கவே இல்லை. தலைப்பைக் கூட வெளியில் சொல்லாமல் ஆண்டுக்கணக்கில் ரகசியம் காத்தனர்.
இந்நிலையில், முதல்முறையாக இப்படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் படம் குறித்துப் பேசியுள்ளார்.

தலைப்பு ஏன் தாமதம்?
அவர் கூறுகையில், "ஆரம்பம்' என்ற தலைப்பு எல்லோரையும் கவர்ந்துள்ளது. இந்த தலைப்புக்கான தாமதம் திட்டமிடப்பட்டது அல்ல. ஆனால் இந்த வரவேற்பு கிடைக்க அந்த தாமதமும் ஒரு காரணம் என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான். இது ஒரு போராட்ட குணமுள்ள ஒரு தனி மனிதனின் கதை. கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் அந்த பிரதான சூரியனை சுற்றி வரும் கோள்கள்தான்.

வெங்கட் பிரபு முந்திக் கொண்டார்
‘மங்காத்தா' படத்தில் நடித்தது போன்றே இந்த படத்திலும் அஜீத் நரை கலந்த தலை முடியுடன்தான் நடிக்கிறார். ‘மங்காத்தா' படத்துக்கு முன்னரே அஜீத்திடம் என் படத்துக்கு இந்த கெட்டப்தான் வேண்டும் என்று கேட்டிருந்தேன், ஆனால் வெங்கட்பிரபு முந்திக் கொண்டார்.

அஜீத்துக்கு அம்சமாக உள்ளது
இந்த ஸ்டைல் அவர் அளவுக்கு வேறு யாருக்காவது அமைந்து இருக்குமா என்றால் சந்தேகமே. நரைத்த தலை, தாடியில் அத்தனை அம்சமாக உள்ளார் அஜீத்.

பில்லாவை விட விறுவிறுப்பு
இது விறுவிறுப்பான வேகமான படம். எங்களது கூட்டணியில் உருவான ‘பில்லா' படத்தை விட பல மடங்கு வேகமாக இருக்கும். அஜீத் ரசிகர்களை மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக இருக்கும் என்பது நிச்சயம்," என்றார்.
ஆரம்பம் பட ஸ்டில்கள் சிலவற்றையும் இன்று வெளியிட்டுள்ளனர். அவற்றைத்தான் நீங்கள் இங்கே பார்க்கிறீர்கள்.


Click it and Unblock the Notifications











