நடிகர் விசுவின் உடலுக்கு திரைத்துறையினர் கண்ணீர் அஞ்சலி.. இன்று பகல் இறுதிச்சடங்கு!
சென்னை: நடிகர் விசுவின் உடலுக்கு திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Recommended Video
நடிகர் விசு கண்மணி பூங்கா என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ஏராளமான படங்களை இயக்கியுள்ள விசு, பல படங்களில் நடித்து உள்ளார்.
விசு திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என பல முகங்களை கொண்டவர். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் படம் பெரும் வரவேற்பை பெற்று வெள்ளி விழா கண்டது.

பாடல்கள் பிரபலம்
கூட்டுக்குடும்ப கதையை மையமாக கொண்ட இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. ஒரு வீட்டை மட்டுமே மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இன்றும் இப்படத்தை ரசிக்காதவர்கள் இல்லை. இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த சம்சாரம் அது மின்சாரம் பாடல் மற்றும் ஊரை தெரிஞ்சிக்கிட்டேன் பாடல் பெரும் பிரபலமானது.

அதிக முக்கியத்துவம்
இந்தப் படத்தில் ஆண் கதாப்பாத்திரங்களை காட்டிலும் பெண் கதாப்பாத்திரங்கள் அதிகம் பேசப்பட்டிருக்கும். குறிப்பாக மனோரம்மாவின் கண்ணம்மா கதாப்பாத்திரம் மற்றும் லக்ஷ்மியின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பார்.

டிவி நிகழ்ச்சிகள்
இதேபோல் திருமதி ஒரு வெகுமதி, பெண்மணி அவள் கண்மணி, அவள் சுமங்கலிதான் உள்ளிட்ட பல படங்கள் பெரும் வெற்றி பெற்றன. நடிகர் விசு கடைசியாக சிங்கமணி ரங்கமணி படத்தைதான் இயக்கினார். அரட்டை அரங்கம், மக்கள் அரங்கம் ஆகிய டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார் விசு.

துரைப்பாக்கம்
நடிகர் விசு கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான மணல் கயிறு 2 படத்தில் நடித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக சிறு நீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார் விசு. இந்நிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று பகல் இறுதிச்சடங்கு
அவரது உடலுக்கு திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஒய்ஜி மகேந்திரன், எஸ்வி சேகர், டிபி கஜேந்திரன், ஆர்வி உதயக்குமார் உள்ளிட்ட பலர் நடிகர் விசுவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் இன்று மதியம் 1 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications











