twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஸ்வரூபம் விவகாரம்: ராஜ்கமல் பட நிறுவனத்திற்கு எதிரான மனுக்களை ஹைகோர்ட்டு தள்ளுபடி செய்தது

    By Mayura Akilan
    |

    Vishwaroopam
    சென்னை: விஸ்வரூபம் படம் விவகாரம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் நிறுவனத்துக்கு எதிராக தமிழ்நாடு திரைப்படம் திரையிடுவோர் சங்கம் தொடர்ந்த 2 வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு திரைப்படம் திரையிடுவோர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:

    நடிகர் கமல்ஹாசன் பங்குதாரராக உள்ள ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், டெல்லியில் உள்ள இந்திய (வர்த்தக) போட்டிகள் கமிஷனில் ஒரு புகார் செய்துள்ளது. அந்த புகார் மனுவில், ''டி.டி.எச். மூலம் விஸ்வரூபம் படத்தை வெளியிட எங்கள் நிறுவனம் முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், விஸ்வரூபத்தை திரையிடமாட்டோம் என்று சட்டவிரோதமான தீர்மானத்தை இயற்றியுள்ளன. இதனால், குறிப்பிட்ட தேதியில் விஸ்வரூபம் படத்தை வெளியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம்'' என்று கூறியுள்ளார்.

    ஆனால், இப்படி ஒரு தீர்மானத்தை எங்கள் சங்கம் இயற்றவில்லை. தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கம் என்பது பதிவு செய்யப்பட்ட சங்கம் கிடையாது. ஆனால், இந்திய போட்டிகள் கமிஷனில் ராஜ்கமல் நிறுவனம் தாக்கல் செய்துள்ள தீர்மான கடித நகலில், எங்களது சங்கத்தின் பதிவு எண்ணும், முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கள் சங்கத்தின் பதிவு எண், முகவரி ஆகியவற்றை பயன்படுத்த யாருக்கும் நாங்கள் அனுமதி வழங்கவில்லை.

    எனவே எங்கள் சங்கத்தின் எண் மற்றும் முகவரியை தவறாக பயன்படுத்தியது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் 13.4.2013 அன்று புகார் செய்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு முதல் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    அதேபோல் மற்றொரு மனுவில் விஸ்வரூபம் படத்துக்கு முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இந்த படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. பின்னர், தடையை திரும்ப பெறப்பட்டது. விஸ்வரூபம் படம் வெளியாவதற்கு ராஜ்கமல் நிறுவனத்துக்கு ஆதரவாக எங்கள் நிறுவனம் செயல்பட்டது. ஆனால், ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்கிய புகாரின் அடிப்படையில், எங்கள் சங்கத்துக்கு இந்திய (வர்த்தக) போட்டிகள் கமிஷன் நோட்டீசு அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசை ரத்து செய்யவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த 2 மனுக்களும் நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:

    தமிழ்நாடு திரைப்படம் திரையிடுவோர் சங்கமும், தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்கமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. மேலும், போலியான ஆவணங்களை தாக்கல் செய்திருந்தால், அதுசம்பந்தமாக தங்கள் மீது நடவடிக்கை எடுக்க இயக்குனர் ஜெனரலுக்கு இந்திய வர்த்தக போட்டிகள் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. எனவே தனியாக ஒரு வழக்கை பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட தேவையில்லை என்று ராஜ்கமல் நிறுவனம் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

    ஆனால் மனுதாரர் தரப்பு வக்கீல், 'இந்திய வர்த்தக போட்டிகள் கமிஷனில் ராஜ்கமல் நிறுவனம் போலியான தீர்மான நகலை தாக்கல் செய்துள்ளதால், இதுகுறித்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அப்போதுதான், உண்மை நிலவரம் வெளியில் வரும்' என்று வாதம் செய்தார்.

    ஆனால், ராஜ்கமல் நிறுவனம் கொடுத்த புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கத்துக்கு எதிராக விசாரணை நடத்தத்தான் இந்திய வர்த்தக போட்டிகள் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு தமிழ்நாடு திரைப்படம் திரையிடுவோர் சங்கத்துக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடவில்லை.

    அதே நேரம், புகார் மற்றும் ஆதார ஆவணங்கள் பொய்யானதாக இருந்தால், இந்திய வர்த்தக போட்டிகள் கமிஷன், அந்த புகாரை தள்ளுபடி செய்துவிடும். ஆனால், அந்த புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளதால், இயக்குனர் ஜெனரல் விசாரணைக்கு, இந்திய வர்த்தக போட்டிகள் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

    எனவே ராஜ்கமல் நிறுவனம் தாக்கல் செய்துள்ள ஆவணம் போலியானதா? என்பதை இந்திய வர்த்தக போட்டிகள் கமிஷன் உத்தரவின்படி விசாரணை நடத்தும் இயக்குனர் ஜெனரல் விசாரித்து, தகுந்த முடிவினை எடுக்க வேண்டும்.

    இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும் என்ற கேள்வியே எழவில்லை என்று இந்த கோர்ட்டு முடிவு செய்கிறது. ஆனால், மனுதாரர் பிரச்சினையை திசை திருப்ப, இரண்டு விதமாக விசாரணையை கோரி இப்படி ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளார். மனுதாரர், தன்னுடைய தரப்பு நியாயங்களை, இந்திய வர்த்தக போட்டிகள் கமிஷன் முன்பு தாக்கல் செய்யலாம் என்று கூறிய நீதிபதி 2 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    English summary
    The Madras High Court has rejected two petition against Rajkamal international the case related to Kamal Haasan's film Vishwaroopam
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X