விஸ்வாசம் ரிலீஸ்... போட்டி போட்டு தியேட்டரை பிடிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ்.. சூப்பர் அப்டேட் இதோ!
சென்னை: விஸ்வாசம் படத்தின் விநியோக உரிமையை பல நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.
அஜித் - நயன்தாரா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். யோகி பாபு, தம்பி ராமையா, கோவை சரளா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்தின் விநியோக உரிமையை கேஜெஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்காக அந்நிறுவனம் பல கோடி ரூபாய்களை கொடுத்துள்ளது.
கேஜெஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் பகுதி வாரியாக விஸ்வாசம் படத்தின் விநியோகத்தை பிரித்து அளித்துள்ளது. அதன்படி, சென்னையில் இப்படத்தை எஸ்பிஐ சினிமாஸ் வெளியிடுகிறது. செங்கல்பட்டில் டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும், கோயம்புத்தூரில் வோல்மார்ட் பிலிம்ஸ் நிறுவனமும் வெளியிடுகின்றன.
திருச்சியில் விஸ்வாசம் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே சொந்தமாக வெளியிடுகிறது. சேலத்தில் பைவ் ஸ்டார் செந்திலும், தூத்துக்குடியில் ஸ்ரீராஜ் பிலிம்ஸ் நிறுவனமும் வெளியிடுகின்றனர். மதுரையில் சுஷ்மா சினி ஆர்ட்ஸும், வட மற்றும் தென் ஆற்காடு ஏரியாவில் எஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் வெளியிடுகின்றன.
கேஜெஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம் விஸ்வாசம் படத்தின் வியாபாரம் பெருமளவு முடிந்துவிட்டதாக தெரிகிறது. பொங்கல் பண்டிகைக்கு ரஜினியின் பேட்ட திரைப்படமும் வெளியாகிறது. இதனால் அதிக தியேட்டர்களை பிடிப்பதில் இரண்டு படங்களுக்கும் இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது.


Click it and Unblock the Notifications











