விவேகம்: கொண்டாட்டமா? கும்மியடியா?
விவேகம் மிக அதி அற்புதமான முயற்சியா? அவசியமான படமா என்ற புத்திச்ஜாலித்தனமாக கேள்விகளை விட்டுவிட்டு, 'அஜீத்து அழிஞ்ஜாண்டோய்' என்ற 'அரை'க்கூவல், முழுக்கேவல்களையும் தாண்டி, வயித்துல இருக்கிற புள்ளைக்கு அஞ்சாறு மாசமா பேர் தேடுற மாதிரி, படம் வெளியாகிறதுக்கு பல மாதங்களுக்கு முன்னாலேயே அதை கலாய்க்க பழமொழிகள், ரைமிங் வார்த்தைகள் சேகரித்த... மீம்ஸ் போராளிகளையும் தாண்டி... லைட்டா விவேகம் பத்தி பேசலாம்.
வேகமாக வாசித்தால் 'டென்ஜ்ஜன்' ஏற்படக்கூடும் என்பதால் 'ச்லோ'வா வாசிக்கவும் பொறும... பொறும...

ஏன்னா இந்த டிக்கெட் ரேட், தியேட்டர் எண்ணிக்கை, கலெக்சன் கணக்கெல்லாம் நமக்கு ஆதாரப்பூர்வமாவும் அனுபவப்பூர்வமாவும் தெரியாது. அதனால இது ஒரு சராசரி ரசிகனில், ஒரு ரசிகன் பார்வைன்னு வச்சிக்குங்க.
ஏன்னா அஜித் ரசிகர்கள், படத்தைக் கொண்டாடுறதுக்கு நிறைய விசயங்கள் படத்துல இருக்கு. அதே மாதிரி.... கும்மியடிக்கணும்னே முடிவு பண்ணி கொலைவெறியோட இருக்கிறவங்களுக்கு தோதாவும் சில பல சம்பவங்கள் இருக்கு...
நம்மூருக்கு புதுமையாகத் தோன்றும் பல விசயங்களை அவ்வப்போது யாரேனும் முயற்சித்துப் பார்ப்பார்கள். முழுப்படத்திலும் அஜித் வேட்டி கட்டி சால்ட் பெப்பர் லுக்கில் வந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்த சிவா தான்... அதற்கு நேர் எதிரில்.. இந்த ஹாலிவுட் மச்சான்களைப்போல், அதாங்க அந்த ஜேம்ஸ்பாண்டு போல வந்தால் எப்டி இருக்கும் என்று யோசித்திருக்கிறார்.
முன்னது ஒர்க் அவுட்டு. பின்னது ஒர்த் அவுட்டு என்று ஃபேஸ்புக் எங்கும் ஒரே பிளிறல்களாக இருக்கிறது.

படத்தில் இருப்பதாக நான் யூகித்துக் கொள்ளும் கதை எனக்குப் பிடித்திருக்கிறது. ஸ்பெஷல் ஏஜெண்ட் கான்செப்டும் பிடித்திருக்கிறது. ஆனால் திரைக்கதை? எனக்கென்னவோ இது ஜேம்ஸ்பாண்டு படங்களைப்போல இருப்பதாகத்தான் தோன்றுகிறது. என்ன ஒண்ணு, நம்ம ஊர் ஜேம்ஸ்பாண்ட். கொஞ்சம் அப்டி இப்டி இருக்கத்தான் செய்யும்.
அஜித், அக்சரா, காஜல், விவேக் ஓபராய் கதாபாத்திரங்கள் சிறப்பாகவே இருக்கின்றன. அனைவருமே கதாபாத்திரத்துக்கு சிறப்பான தேர்வு. அக்சரா அந்த கேரக்டருக்கு பொருத்தமான தேர்வு என்றால், காஜல் கேரக்டருக்கு அழகான தேர்வு. விவேக் ஓபராய் ஸ்டைலான தேர்வு. தமிழ் டப்பிங் மிஸ் ஆகாத அளவுக்கு நடிச்சிருப்பார்னு நான் எதிர்பார்க்கல.
கேமரா, லொக்கேஷன்ஸ், பைட் எல்லாமே அட்டகாசம்தான்.
ஆனா, அஜித்தும் ஆக்சனும் போதும்னு சிவா நெனைச்சிட்டாரோ என்னவோ.
எந்தப் பக்கமாவது ஒரு பக்கம் நின்னுருக்கலாமே சிவா சார். எல்லா வசனமும் செமயா இருக்கு. பந்தியில கடைசில கிடைக்கிற பாயசம் நல்லாத்தான் இருக்கும் சார். அதுக்காக முதல்ல இருந்தே, பாயாசத்தை மட்டுமே குடிக்க முடியுமா?
படத்தின் மிக முக்கியமான விசயத்தைப்பத்தி விவேக் ஓபராய், வாய்ல மட்டுமே வடை சுடுறார். உலகத்தையே கட்டுப்படுத்துற ஒரு கூட்டம். அவங்களில் விவேக் ஓபராய் யாரு? அவங்களுக்குள்ள ஒரு மீட்டிங், அவங்களோட சாட்டிங், அவங்க பிளானிங் எல்லாம் செம பக்காவா சீன் பண்ணிருக்கலாமே சார்.
வில்லன் கேங் பத்தி நீங்க விலாவாரியா விளக்கி இருந்தா... பெப்சி, கோக் எல்லாத்தையும் ரோட்ல உடைச்ச ஜல்லிக்கட்டு படை, இன்னொரு போராட்டத்துக்கு தயாராகி இருக்குமே.
சரி, காஜல் - அஜித் லவ்வுக்காவது கொஞ்சம் இடம் கொடுத்து ரெண்டு பாட்டு போட்ருக்கக் கூடாதா? ஸ்ட்ரெயிட்டா பொண்டாட்டி ஆக்கிவிட்டுட்டு அந்த ரூட்டையும் சுவிட்ச் ஆப் பண்ணிட்டீங்க.
அனிருத்து... அந்த ஊத்து தான்... படத்தோட பெரிய மைனஸ் சார். பாட்டெல்லாம் பிடிச்சிருக்குது. ஆனா, அந்தப் பின்னணி இசை... ஒரே சத்தக்காடா இருக்கு.

போதாக்குறைக்கு, கோலவிழியம்மா ராஜகாளியம்மா பாட்டையும், சிங்கம்போல நடந்து வரான் பாட்டையும் வி ட்ரான்ஸ்பர்ல அனுப்பி வச்சி, ப்ளே பண்றீங்களே சார். ஹாலிவுட் படத்தை நம்ம ஊர்ல டப் பண்றவங்க கூட அதைச்செய்ய மாட்டாங்களே சார்.
அப்புறம் எடிட்டர் சார், படம் ரெண்டரை மணி நேரம் கண்டிப்பா இருந்தே ஆகணுமா சார்? நீங்க இன்னும் சிறப்பா இருந்திருந்தா, இந்த சிரிப்பை கொறைச்சிருக்கலாமே சார். அதே மாதிரி இந்த ஸ்டண்ட் மாஸ்டர்... அடப்போங்க சார். என்னதான் டைரக்டரும் ஹீரோவும் கேட்டாலும் அப்டியா பண்ணுவீங்க. 500 பேர், அஞ்சு ஹெலிகாப்டர்... எல்லாம் சேர்ந்து சுட்டாக்கூட அவர் மேல குண்டு படாதா சார்... ஆனா அவர் சுட்டா மட்டும் ஹெலிகாப்டரே வெடிச்சி செதறுமாம்ல. கடுப்பேத்தாதீங்க சார்.
படம் வெளியூரு ஸ்டைல். ஆனா, இந்த இத்துப்போன உள்ளூர் பில்டப்ப விடவே மாட்டீங்களா?
படமே ரொம்ப நீளமா போகுது. இதுல நான் படம் பாத்த தியேட்டர்ல ஒரு படம் பாத்து முடிக்க 5 மணி நேரம் ஆக்கிட்டாங்க. மரண மொக்க படத்தைக்கூட சூப்பரா காட்டுவாங்க. ஆனா அதென்ன மாயமோ, மந்திரமோ டெண்டு கொட்டாய்ல படம் பாக்கிற மாதிரி 20 வருசத்துக்கு முன்னாடி கூட்டிட்டு போயிட்டாங்க. (அஜித்தை பிடிக்காதவர்கள் செய்யும் சதியின் பார்ட்டுதான் அந்த வேலையோன்னு தோணிருச்சு எனக்கு)
ஆக விவேகம்... வேகமா இருக்கு. ஆனா விவேகமா இல்லேண்ணு முடிவுக்கு வரலாம். ஆனா, அய்யய்யோன்னு சொல்ற அளவுக்கு மரண மொக்கையா எனக்கு தோணல.
அஜித் மற்றும் படக்குழுவினரின் உழைப்பு படத்துல அழகா தெரியுது. அதே மாதிரி எது கிராபிக்ஸ், எது ஒரிஜினல்னு அச்சு அசலா கண்டுபிடிக்கிற அளவுக்கு நாலேஜூ நமக்கு இல்லாததுனால படத்தின் ஆக்சன் காட்சிகள் ஒரு சில இடங்களைத்தவிர ரொம்பப் பிடிச்சிருக்கு.
காஜல் ரொம்ப அழகா இருக்காங்க. மென்மையான டிபிக்கல் இந்திய தமிழ்ப்பெண் கேரக்டர், நன்று நன்று.
இப்படியாகத்தான் விவேகம், எனக்குத் தோன்றியது.
ஆனா இன்னொரு தடவை பாக்கணும்.
யார் யாரோ சொன்னாலும்
ஊரே சொன்னாலும்
ஃபேஸ்புக்ல, வாட்ஸ் அப்ல, ட்விட்டர்ல கலாய்ச்சாலும்,
விமர்சனம்னு எதை எதையோ வாசிச்சாலும் எழுதினாலும்,
நானா முடிவு பண்ற வரைக்கும்...
நன்றி மீண்டும் சந்திப்போம். #Vivegam
- முருகன் மந்திரம்


Click it and Unblock the Notifications











