மரம் நடும் வேலைக்கு இடையே ‘மரகதக்காடு’வை வெளியிட்ட விவேக்!
மரகதக்காடு பட ட்ரெயிலரை விவேக் வெளியிட்டுள்ளார்
சென்னை: மரகதக்காடு ட்ரெயிலரை விவேக் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் மங்களேஷ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மரகதக்காடு. இப்படத்தின் ட்ரெயிலரை நடிகர் விவேக் வெளியிட்டுள்ளார்.

சமீப காலமாக சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட படங்கள் வரத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் முழுக்க முழுக்க வனப்பகுதியில் படமாக்கப்பட்ட படமாக மரகதக்காடு தயாராகியுள்ளது.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படம், காடு, காடுதரும் பொருள் என இருக்கும் காணி இன மக்களின் வாழ்க்கையைப் பேசும் படமாக எடுக்கப்பட்டுள்ளது. நாகரீகம் நகர விரிவாக்கம் என்ற பெயரில் சாலை விரிய விரிய காடு அழியும் அவல நிலையைப் பற்றி பேசக்கூடிய படமாக இப்படம் தயாராகியுள்ளது.
காடு எவ்வளவு அழகானது என உணர்த்தும் படமாகவும், அதே நேரத்தில் காடுகளின் முக்கியத்துவம் குறித்து உணர்த்தும் படமாகவும் இப்படம் இருக்கும் என இயக்குனர் மங்களேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
இப்படத்தில், அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள இயக்குனர் இலியாஸ் காத்தவன், ஜேபி.மோகன், பாவா லட்சுமணன் மற்றும் பல மலைவாழ் மக்கள் நடித்துள்ளனர். ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் ட்ரெயிலரை ட்விட்டரில் வெளியிட்டுள்ள நடிகர் விவேக், இப்படத்தின் ட்ரெயிலரை வெளியிடுவதை பெருமையாக உணர்வதாக ட்வீட் செய்துள்ளார். நடிகர் விவேக் மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு, பல இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கிறார். மேலும், பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை உருவாக்கும் திட்டத்திற்கு விளம்பர தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











