“இந்தியன் 2வில் இருக்கேனா.. இல்லையா..”.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விவேக்!
இந்தியன் 2வில் தான் நடிப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் நடிகர் விவேக்.
சென்னை: இந்தியன் 2 படத்தில் நடிப்பது குறித்து பரவிய வதந்திகளுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் உரிய விளக்கம் அளித்துள்ளார் நடிகர் விவேக்.
2.0 படத்தைத் தொடர்ந்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாக வேலைகளைத் துவக்கி விட்டார் இயக்குநர் ஷங்கர். 22 வருடங்களுக்கு முன்னர் முதல் பாகத்தில் நடித்த கமலே இரண்டாம் பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அப்படத்தில் நடிப்பவர்கள் பற்றிய விவரங்கள் ஒவ்வொன்றாக படக்குழுவால் அறிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் முக்கிய கேரக்டரில் குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது.

இந்தியன் 2வில் விவேக்:
இந்நிலையில், காமெடி நடிகர் விவேக் இப்படத்தில் நடிப்பதாக சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவியது. முதல் பாகத்தில் கமலுடனேயே வந்து கவுண்டமணியும், செந்திலும் காமெடி செய்திருந்தனர். அதைப் போல், விவேக் தான் இந்தியன் 2 படத்தில் காமெடி செய்யப்போகிறார் என அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விவேக் விளக்கம்:
அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் விவேக் விளக்கமளித்துள்ளார். அதில் அவர், ‘நான் பள்ளி பருவத்திலிருந்தே கமல்ஹாசனின் தீவிர ரசிகன். அது அபூர்வ ராகங்கள் வெளியான நேரம். நான் 1975ம் வருடம் சாந்தோம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.

வதந்திகளை பரப்ப வேண்டாம்:
அவருடன் சேர்ந்து பணியாற்றினாலும், பணியாற்றாவிட்டாலும் தற்போது வரை நான் அவருடைய ரசிகன் தான். இந்தியன் 2 கதைக்கு நான் தேவைப்பாட்டால் இயக்குநர் ஷங்கர் நிச்சயம் என்னை அழைப்பார். அதுவரை வதந்திகளை பரப்ப வேண்டாம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

படக்குழுவுக்கு வாழ்த்து:
முன்னதாக இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது நடிகர் விவேக் தன்னுடடைய டிவிட்டர் பக்கத்தில், ‘இந்தியன் 2 படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். தற்போதைய சூழலில் இந்தப் படம் முக்கியமான ஒன்று. இதற்காகத்தான் காத்திருக்கிறோம்' என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











