சித்ராவுக்கு என்ன நடந்தது? தற்கொலைக்கு காரணம் என்ன? ஹேமந்த் பதில் சொல்லியே ஆகணும்.. தாயார் பேட்டி!
சென்னை : சித்ராவுக்கு என்ன நடந்தது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன என்பதை, ஹேமந்த் சொல்லியே ஆகவேண்டும் என்று சித்ராவின் தாயார் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
விஜே சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சென்னை நசரத் பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சித்ரா ஹேமந்த் என்பவரை காதலித்து பதிவு திருமணம் செய்திருந்தார். திருமணமாகி 3 மாதத்திற்குள்ளேயே கணவருடன் தங்கியிருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சித்ரா.

மாஃபியா கும்பலுடன் தொடர்பு
சித்ரா தற்கொலையை அடுத்து, ஹேமந்த் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து 3 மாதங்களுக்கு முன்பு வெளியே வந்த ஹேமந்த் சமீபத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி போலீஸில் புகார் அளித்தார். மேலும் சித்ரா மரணத்திற்கு காரணம் சில அரசியல் தலைவர்களும் ஒரு மாஃபியா கும்பலும் தான் என்றார்.

பழி சுமத்துவது நியாயமா?
இந்நிலையில், நடிகை சித்ராவின் பெற்றோர் இன்று பேட்டி அளித்துள்ளனர். அதில், சித்ராவின் மரணத்திற்கு ஹேமந்த் தான் காரணம், சித்ராவுக்கு அரசியல் தலைவர்களுடன் தொடர்பு, ஒரு மாஃபியா கும்பலுடன் தொடர்பு இருந்து இருந்தால்? ஹேமந்த் செய்த டார்ச்சருக்கு அவனைத்தான் கொன்று இருக்க வேண்டும், சித்ரா ஏன் சாகணும், இல்லாத கட்டுக்கதைகளை கூறி இறந்து போன மகள் மீது பழி சுமத்துவது நியாயமா? என்றார்.

வயிறு எரியுது
என் பெண்ணுக்கு என்ன நடந்தது?... தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம்? வீடு இருக்கும் போது ஹோட்டலில், ரூம் போட்டு தங்க என்ன காரணம் இதற்கு எல்லாம் ஹேமந்த் பதில் சொல்லியே ஆகவேண்டும், இரண்டு வருஷம் ஆகியும் இதுவரை ஹேமந்த் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது, அவர் சுதந்திரமா வெளியில் சுற்றி திரிவதை பார்க்கும் போது வயிறு எரியுது என்றார்.

தப்பானவள் இல்லை
காரு எம்.எல்.ஏ வாங்கி கொடுத்ததாக சொல்றாங்க, எந்த எம்.எல்.ஏ கார் வாங்கி கொடுத்தார் பெயரை சொல்ல சொல்லுங்க. என் மகள் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசுல வாங்கிய கார் அது, அப்போ அதுவும் பணம் கட்டாததால் எடுத்துட்டு போய்டாங்க. அவ செத்த பிறகு அவள தப்பு தப்பா சொல்லுவதை கேட்கும் போது மனசு வேதனையாக இருக்கு. மீடியாக்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் ஒன்று சொல்றேன் எது உண்மை, எது பொய் என தீவிரமாக ஆலோசித்து செய்தி வெளியிடுங்க என் மகள் தப்பானவள் இல்லை என்றார்.

மரணத்திற்கு நீதி வேண்டும்
இத்தனை நாள பேசாமல் இருந்து விட்டு வழக்கு விசாரணைக்கு வரும் நேரத்தில்,வழக்கை திசை திருப்ப சித்ராவை பற்றி தப்பு தப்பா சொல்கிறார் ஹேமந்த். என் மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும், முதலமைச்சரை சந்திக்க பல முறை மனு போட்டேன், கோட்டைக்கும் போனேன் ஆனால், அவரை பார்க்க முடியல, இந்த பேட்டியின் மூலமா அவருக்கு கோரிக்கை வைக்கிறேன் சித்ராவின் மரணத்திற்கு நீதிவேண்டும் என்று கண்ணீர் மல்க பேசினார் சித்ராவின் தாயார்.


Click it and Unblock the Notifications











