பிஜிலி ரமேஷ் உயிரிழப்பு.. சாவு வீட்டில் கன்டெண்ட்டா?.. தப்பா பேசுறீங்க.. செம கடுப்பான விஜே சித்து
சென்னை: யூட்யூப் பிராங்க் ஷோ மூலம் பிரபலமான பிஜிலி ரமேஷ் நேற்று முன் தினம் இரவு அவரது வீட்டில் உயிரிழந்தார். சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்துவந்த சமயத்தில் நிகழ்ந்த ரமேஷின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினரை உச்சக்கட்ட சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ரமேஷின் இறுதிச்சடங்கு நேற்று மாலை நடைபெற்றது.சூழல் இப்படி இருக்க பிரபல யூட்யூபரான விஜே சித்து பிஜிலியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் கொஞ்சம் டென்ஷன் ஆகிவிட்டார்.
யூட்யூபால் பிரபலமடைந்தவர்கள் இங்கு ஏராளமானோர் இருக்கிறார்கள். சினிமா என்ற மெயின் ஸ்ட்ரீம் மீடியாவுக்குள் செல்வதற்கும், விரைவிலேயே புகழ் அடைவதற்கும் யூட்யூப் நல்ல ஃப்ளாட்பார்மாக இருக்கிறது என்பது உண்மை. அந்தவகையில் பிஜிலி ரமேஷுக்கும் யூட்யூப் சூப்பர் ஃப்ளாட்பார்மாக அமைந்தது. விஜே சித்து என்ற பிரபல யூட்யூபர் செய்த பிராங்க் ஷோ மூலம் பிரபலமாகி சமூக வலைதளங்களில் ஜொலிக்க ஆரம்பித்தார் பிஜிலி ரமேஷ். பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன.

சினிமா வாய்ப்புகள்: அதன்படி கோமாளி, நட்பே துணை, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்தார் பிஜிலி ரமேஷ். வெகுளித்தனமான பேச்சும், உடல்மொழியும் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தது. இதன் காரணமாக ரமேஷுக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வர ஆரம்பித்தன. வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி எப்படியாவது மேலே வந்துவிட வேண்டுமென்ற நோக்கத்தில் உழைக்க ஆரம்பித்தார் பிஜிலி. ஆனால் அவருக்கு எமனாக வந்து நின்றது குடிப்பழக்கம்.
படுத்த படுக்கையில்: ஏற்கனவே அவர் குடிக்கு அடிமையாகியிருந்தார். அதன் விளைவாக அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டது. அதனால் படுத்த படுக்கையானார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எப்படியாவது அவரை உடல்நலம் தேற வைத்துவிட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் தீவிரமாக முயற்சி செய்தனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிகிச்சை கொடுப்பதற்கான நிலையை எல்லாம் ரமேஷின் உடல் கடந்துவிட்டதாக கையை விரித்தனர்.
உயிரிழந்த ரமேஷ்: இருந்தாலும் நம்பிக்கையை விடாத ரமேஷின் குடும்பத்தினர் சிகிச்சை அளித்துவந்தனர். சூழல் இப்படி இருக்க நேற்று முன் தினம் அவர் தனது வீட்டில் உயிரை விட்டார். அவரது உயிரிழப்பு குடும்பத்தினரை நிலைகுலைய செய்திருக்கிறது. ஒருபக்கம் பிரிந்த கணவன், மறுபக்கம் வளரும் மகன் என செய்வதறியாது திகைத்து நிற்கிறார் ரமேஷின் மனைவி மோகனா. ரமேஷின் இறுதிச்சடங்கு நேற்று மாலை சென்னையில் நடந்தது. பிரபல யூட்யூபரான விஜே சித்துவும் தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.
சாவு வீட்டிலுமா கன்டெண்ட்?: இறுதி அஞ்சலியை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு செய்தியாளரை காண்பித்து. 'காலையிலிருந்து நின்று கொண்டிருக்கிறோம். ஏதாவது கன்டெண்ட் கொடுத்துவிட்டு போங்கள் என்று ஒருவர் சொன்னார். சாவு வீட்டிலுமா கன்டெண்ட். கன்டெண்ட்டுக்காக நாங்கள் வரவில்லை. தப்பா பேசுறீங்க. எங்களால் மட்டும் அவர் வளரவில்லை. அவரால் நாங்களும்தான் வளர்ந்திருக்கிறோம்''என்றார். முன்னதாக பிஜிலி ரமேஷ் சிகிச்சையில் இருந்தபோது சித்து 50,000 ரூபாய் கொடுத்து உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











