சூப்பர் ஹிட்டான 'லூசிஃபர்' பட ரீமேக்.. 'சாஹோ' இயக்குனர் திடீர் மாற்றம்.. அறிவித்தது படக்குழு!
ஐதராபாத்: 'லூசிஃபர்' படத்தின் ரீமேக்கை இயக்கும் இயக்குனர் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
மலையாளத்தில் மோகன்லால் ஹீரோவாக நடித்து சூப்பர் ஹிட்டான படம், லூசிஃபர்.
இதை நடிகர் பிருத்விராஜ் இயக்கி இருந்தார். இந்தப் படம் தமிழிலும் டப் ஆகி வெளியானது.

வசூல் சாதனை
மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டோவினோ தாமஸ், சாய்குமார் உட்பட பலர் இதில் நடித்திருந்தனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு தீபக் தேவ் இசை அமைத்திருந்தார். இந்த படம் மலையாளத்தில் வசூல் ரீதியாக சாதனைப் படைத்தது. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் இது என்கிறார்கள்.

தெலுங்கு ரீமேக்
தான் இயக்கிய முதல் படம் சூப்பர் ஹிட்டானதால் நடிகர் பிருத்வி ராஜ் உற்சாகமாக இருக்கிறார். அடுத்து அவர் எம்புரான் என்ற படத்தையும் இயக்க இருக்கிறார். இந்நிலையில், லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை சிரஞ்சீவி வாங்கியிருந்தார். இந்தப் படத்தை யார் இயக்குகிறார் என்ற கேள்வி எழுந்தது.

சாஹோ இயக்குனர்
தெலுங்கு இயக்குனர் விவி விநாயக் இயக்குவார் என முதலில் தகவல்கள் வெளியாயின. பின்னர், சுஜீத் இயக்குவார் என்று கூறப்பட்டது. இவர், பிரபாஸ், ஷ்ரத்தா தாஸ், அருண் விஜய் உட்பட பலர் நடித்த 'சாஹோ' படத்தை இயக்கியவர். இதை நடிகர் சிரஞ்சீவி உறுதிப்படுத்தி இருந்தார்.

விவி விநாயக்
இதன் திரைக்கதையை தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப மாற்றி அமைத்தார் சுஜீத். இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இதனால் இந்த படத்தில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தாராம். இதையடுத்து விவி விநாயக் திரைக்கதை மாற்றத்தில் பங்கேற்றார். இந்நிலையில் அவரே படத்தை இயக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

ராம்சரண் தேஜா
இருவரும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சிரஞ்சீவி, இப்போது கொரட்டலா சிவா இயக்கும் ஆச்சாரியா படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் அக்டோபரில் தொடங்குகிறது. இதில், அவர் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இதையடுத்து, 'லூஃசிபர்' ரீமேக்கில் நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











