ரஜினி, விஜய்யை கட்டாயப்படுத்தி கால்ஷீட் வாங்கினாரா தாணு?- புது குற்றச்சாட்டு
பதவியைத் தவறாகப் பயன்படுத்தி ரஜினி, விஜய்யிடம் கால்ஷீட் பெற்று படம் தயாரிக்கிறார் தாணு. அவர் உடனடியாக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளரும் திமுக பிரமுகருமான ஜெ.அன்பழகன் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
"நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு ஒருதலைப்பட்சமாக யாரையும் கலந்து ஆலோசிக்காமல் சரத்குமார் அணிக்கு ஆதரவு அளித்து அனைத்து தயாரிப்பாளர்களையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினார்.
சரத்குமாரை நடிகர் சங்கத் தேர்தலில் கலைப்புலி எஸ்.தாணு ஆதரித்ததற்கான ஒரே காரணம் எஸ்.பி.ஐ. சினிமாஸ் உடன் நடிகர் சங்கம் போட்டிருந்த ஒப்பந்தம். இதில் தாணு அவர்களுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

அதே போல் தயாரிப்பாளர் சங்கத்தில் அரசியல் சாயம் இருக்கக் கூடாது. ஆனால் தாணு மூச்சுக்கு மூச்சு தமிழக முதல்வர் பெயரை உச்சரித்து அவரையும் ஏமாற்றி இந்தப் பதவியில் அமர்ந்து கொண்டு பிரபல நடிகர்களின் கால்சீட்டுகளை வலுக்கட்டாயமாகப் பெற்று பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். (தாணு, இப்போது ரஜினி நடிக்கும் கபாலி படத்தையும், விஜய் நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறார்) இவரைப் போன்ற சுயநல வியாபாரிகள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் நீடிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
எனவே தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அவரை அப்பதவியிலிருந்து நீக்க ஒரு முடிவு எடுக்க வேண்டும். இது ஆரம்பம் தான், இது தொடர்பாக தயாரிப்பாளர் பலருடன் கலந்து ஆலோசித்து அவருக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கி தயாரிப்பாளர்கள் சங்கம் நடுநிலையுடன் செயல்படப் பாடுபடுவேன் என்று கூறியிருக்கிறார்.

குறிப்பு: திரு.தாணு முதலில் தி.மு.க வில் இருந்தார், பிறகு ம.தி.மு.க வுக்கு போனார், இப்போது அ.தி.மு.க வில் இருக்கிறார், நாளை ???"
-இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஜெ அன்பழகன்.


Click it and Unblock the Notifications











