நயன்தாரா சுந்தர் சி மோதலா? மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பில் நடந்தது என்ன? குஷ்பு விளக்கம்!
சென்னை: முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று சொல்வார்கள். அந்த கதை தான் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கும் நடந்து வருகிறது. மூக்குத்தி அம்மன் 2 பட பூஜையில் மற்ற நடிகைகளிடம் நயன்தாரா நடந்து கொண்டவிதம் சர்ச்சையானதை அடுத்து, அந்த படம் குறித்து பலவிதமான செய்திகள் இணையத்தில் பரவி வரும் நிலையில், வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குஷ்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய மூக்குத்தி அம்மன் படம் 2020 ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படத்தில் நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி, ஊர்வசி ஆகியோர் நடித்திருந்தனர். சாதாரண குடும்பத்து கதையை கையில் எடுத்து, எதார்த்தமான நடிப்பை அனைவரும் வெளிப்படுத்தி இருந்தனர். இந்த படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்த பேச்சு வார்த்தை நடந்த போது, ஆர்ஜே பாலாஜி ஒரு பெரிய சம்பளத்தை கேட்டதாக சொல்லப்படுகிறது.

மூக்குத்தி அம்மன் 2: இதையடுத்த இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்குவார் என்றும், அதில், நயன்தாராவே மூக்குத்தி அம்மனாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அண்மையில் இப்படத்தின் பூஜை ரூ. 1 கோடி செலவில் கோவில் போல பிரம்மாண்ட செட் போடப்பட்டு நடைபெற்றது. பான் இந்திய திரைப்படமாக உருவாக உள்ள இந்த படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடி என்றும் இப்படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார். அந்த படத்தின் பூஜையில் ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, மீனா, மைனா நந்தினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரெஜினாவை மிரட்டினார்: இந்த பட பூஜையில் நயன்தாரா, மீனாவை கண்டு கொள்ளவே இல்லை என்றும், அவர் பல முறை பேச முயற்சி செய்தும் நயன்தாரா அவரை புறக்கணித்தார் என்றும் செய்திகள் வெளிவந்தன. அதுமட்டுமில்லாமல், நயன்தாரா மேடையில் இருந்த போது ரெஜினா, தன்னுடைய செல்போனில் செல்ஃபி எடுத்துள்ளார். இதனால், மேலும் கடுப்பான நயன்தாரா கேரவனுக்கு வந்து ரெஜினாவுக்கு போன் போட்டு, என் அனுமதி இல்லாமல் எப்படி போட்டோ எடுத்தாய் என மிரட்டியதாகவும் சொல்லப்பட்டன.
நயன்தாரா சுந்தர் சி மோதலா: இதனால், சுந்தர் சி, நயன்தாராவை வைத்து எப்படி படத்தை எடுக்கப்போகிறார் என்பதே தெரியவில்லை என்ற பேச்சு எழுந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நயன்தாரா. உதவி இயக்குனர் ஒருவரை கடுமையாக திட்டிவிட்டதாகவும், இதை அறிந்த சுந்தர் சி கோபத்தில் அவரை வைத்து படம் எடுக்க முடியாது என்று படப்பிடிப்பு தளத்தில் இருந்து சென்றுவிட்டதாகவும், பின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தலையிட்டு பிரச்சனையை முடித்துவைத்தாகவும் பல பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்தன.

எல்லாம் கிண் திருஷ்டி: மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து இணையத்தில் பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நடிகை குஷ்பு, தனது எக்ஸ் தளபக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சுந்தர் சியின் நலம் விரும்பிகள் அனைவருக்கும். மூக்குத்தி அம்மன் 2 பற்றி பல தேவையற்ற வதந்திகள் இணையத்தில் உலவி வருகிறது. அது உண்மையில்லை படப்பிடிப்பு திட்டமிட்டபடி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுந்தர் சி எப்படிப்பட்ட இயக்குநர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும், அதேபோல, நயன்தாரா ஒரு திறமையான நடிகை, அதை அவரே நிரூபித்துள்ளார். கடந்த காலத்தில் அவர் நடித்த ஒரு கதாபாத்திரத்தில், மீண்டும் நடித்து வருகிறார். இணையத்தில் பரவும் இந்த வதந்திகள் "திருஷ்டி எடுத்த மாதிரி". நடப்பதெல்லாம் நன்மைக்கே நடக்கும். உங்களின் ஆசீர்வாதம் மற்றும் அன்பு மட்டுமே நாங்கள் நம்புகிறோம். எனவே நிதானமாக இருங்கள், மேலும் எண்டர்டெயின்மென்ட் மன்னரின் மற்றொரு பிளாக்பஸ்டருக்காக காத்திருங்கள் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











