அன்புள்ளங்கள் கூடிக்களித்துக் கண்ட திரைப்படங்கள் - மலரும் நினைவுகள்

By Ka Magideswaran

- கவிஞர் மகுடேசுவரன்

சென்னை: ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டில் பள்ளிக் கோடை விடுமுறையானது மூன்று திங்கள்களுக்கு நீடித்தது. அன்றைய கோடை வெய்யிலைக் கருத்தில்கொண்டு அப்போதைய அரசு அவ்வாறு நீண்ட விடுமுறையை அறிவித்தது. எனக்கு அவ்வாண்டு மூன்றாம் வகுப்பு முடித்தமைக்கான கோடை விடுமுறை. உறவினர் ஒருவரோடு கூட்டாகச் சேர்ந்து இருப்பூர்தித் துறையில் கட்டுமான ஒப்பந்தப் பணிகளைச் செய்யும் முயற்சியில் என் தந்தையார் அப்போது ஈடுபட்டார். அந்தக் கட்டுமானப் பணிகள் தென்னக இருப்பூர்தித் துறை வரம்புக்குட்பட்ட எப்பகுதியிலும் பெறப்படும். பணிநடக்க வேண்டிய இடத்திற்குச் சென்று தண்டவாளத்தின் ஓரத்தில் ஓலைக் குடில் அமைத்து வேலை பார்க்க வேண்டும்.

எண்பத்து மூன்றாம் ஆண்டின் கோடையில் மானாமதுரையை அடுத்த சூடியூரில் பாலக்கட்டுமானப் பணி பெறப்பட்டிருந்தது. எனக்கும் கோடை விடுமுறை என்பதால் குடும்பத்தோடு இடம்பெயர்ந்து மானாமதுரையில் மூன்று திங்கள்கள் குடியிருந்தோம். சங்கம் வளர்த்த பாண்டிய மண்ணில் விழுந்து புரண்டு விளையாடிக் களித்த அந்நாள்கள் என்றும் மறக்க முடியாதவை. மானாமதுரையில் வாடகை வீடொன்றில் குடியிருந்தோம். பெட்டிக்கடைக்குக்கூட வக்கில்லாத பட்டிக்காட்டில் வாழ்ந்த எங்களுக்கு மானாமதுரை என்னும் சிறுநகரத்தில் வாழக்கிடைத்த வாய்ப்பு சிறைக்கதவைத் திறந்துவிட்டதுபோல் அமைந்தது. சீனியப்பா, அமுதம் என்னும் இரண்டு திரையரங்குகள் அவ்வூரின் முதன்மைப் பொழுதுபோக்கிடம்.

Watching Movies With Affectionate People

சீனியப்பா அரங்கம் அப்போதுதான் கட்டித் திறக்கப்பட்டிருந்தது. புதுத்திரையரங்கின் அப்போதைய வழக்கப்படி வெண்திரைக்கு முன்னால் அடர்சிவப்பு நிறத்தில் மடிப்பலைகளை உடைய மூடுதிரை போடப்பட்டிருந்தது. படம் திரையிடப்படுவதற்கு முன்னால் பின்னணியில் நல்ல கொட்டொலியான இசைமுழங்க, மூடுதிரையின் கீழ்முனையில் செவ்விளக்கு ஒளிர அத்திரை மேலுயர்த்தப்படும். இரண்டு மூன்று மணித்துளிகளுக்கு நிகழும் அந்தத் திரைதூக்குவினையானது பார்வையாளர்களை மெய்ம்மறக்கச் செய்து திரைப்படத்தில் ஒன்ற வைத்துவிடும்.

எட்டாம் அகவை நிரம்பிய சிறுவனாக மூன்றாம் வகுப்பின் கோடை விடுமுறையைக் கழிக்க மானாமதுரை வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் எவ்வூர்க்குச் சென்றாலும் அவ்வூர்க் கொட்டகையில் ஒரு திரைப்படம் பார்த்துவிட்டுத் திரும்புவதுதான் அப்பயணத்தை நிறைவூட்டுவதாக இருக்கும். மானாமதுரைக்குக் குடிவந்ததும் சீனியப்பா திரையரங்கில் படம் பார்த்துவிடுவது என்னும் ஆசையில் திளைத்தோம். அறியாச் சிறுவன் என்பதால் என் ஆவல் ஏற்புடையதுதான். என்னைப் போலவே என் தாயாரும் படம்பார்க்கும் பேராவலில் சிக்குண்டார். இரண்டொரு நாளிலேயே பக்கத்து வீட்டிலிருந்த புஷ்பாக்கா என் தாயாரின் இளந்தோழியாகிவிட்டிருந்தார். சீனியப்பா திரையரங்குக்கு அழைத்துச் செல்லும் பெரும்பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.

திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்ணான புஷ்பாவைத் தனியே எங்கும் அனுப்புவதில்லை. என் தாயாரின் மேற்பார்வையில் அவரை அனுப்பிவைப்பதில் அவர் வீட்டார்க்குத் தயக்கம் இருக்கவில்லை. ஒருவர்க்கொருவர் துணையான நிலையில் ஒரு நண்பகல் வேளையில் சீனியப்பா திரையரங்குக்குக் கிளம்பிவிட்டோம். அத்திரையரங்கில் பின்பற்றப்பட்ட வழக்கம் - படக்காட்சி தொடங்குவதற்கு முன்பாக கூம்பொலிப்பானில் கே.பி. சுந்தராம்பாள் பாடிய "பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா..." பாடலை ஒலிக்க விடுவார்கள். பகற்காட்சிக்கான முதல்வினை அந்தப் பாடலை ஒலிக்க விடுவதிலிருந்து தொடங்குகிறது. பழம் நீயப்பா முடிந்ததும் பக்தி ஒதுக்கீடு சாமி கும்பிடு எல்லாம் முடிந்துவிட்டதாய்க் கணக்கு. அடுத்ததாய் நிகழ்காலப் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கும். இரண்டாவது பாடலாகவே "நேத்து இராத்திரி யம்மா..." ஒலிக்கும்.

பழம் நீயப்பா பாடத் தொடங்கியதும் பரபரப்பாகக் கிளம்பினோம். புஷ்பாக்கா என் கைவிரல்கலைக் கோத்துப் பிடித்துக்கொண்டார். இன்றைக்கெல்லாம் நம் வீட்டுப் பெண்கள் சந்தைக்கும் பக்கத்து ஊர்களுக்குமேகூட இரவுடை அணிந்தவாறே செல்கிறார்கள்... அன்றைக்கு ஒரு திரைப்படம் பார்க்கச் செல்வதானால் திருமணத்திற்குச் செல்வதைப்போல் உரிய ஒப்பனையோடுதான் கிளம்பிச் சென்றார்கள். பெண்களுக்குத் திரைப்படம் பார்த்தல் என்பது உயிர்ப்பான மகிழ்வுச்செயல். கட்டற்ற வெளிப்பாடு.

முதன்மைச் சாலையில் சென்றால் நேரமாகும் என்று இருப்பூர்தி வழித்தடத்தையொட்டிய ஒற்றையடித் தடத்தில் நடந்தோம். சுற்றிலும் முள்ளடர்ந்த அவ்வழியில் சிறுவன் ஒருவனை அழைத்துக்கொண்டு இரண்டு பெண்டிர் நடந்து செல்வது பாதுகாப்பற்றதுதான். ஆனாலும், திரைப்படக் காட்சி மயக்கம் அவர்களைச் செலுத்தியது. ஐந்து மணித்துளி நடையில் சீனியப்பனை நெருங்கிவிட்டோம். ஒற்றையடித் தடத்தைத் தாண்டி சாலையைப் பிடித்ததும் திரையரங்கம் வந்தது. பெண்களுக்கான நுழைதாள் கூண்டுக்குள் நுழைந்து சீட்டெடுத்து அரங்குக்குள் நுழைந்து அமர்ந்தாயிற்று.

முன்பு நான் பார்த்திருந்த பத்திருபது அரங்குகளில் வெண்திரைதான் கட்டப்பட்டிருந்தது. இங்கே அடர்சிவப்பு நிறத்தில் பெரும்பதாகை தொங்குகிறதே என்று ஏமாற்றமாய்ப் போய்விட்டது. அவ்வாறு திரைதொங்கியது எனக்கு அறவே பிடிக்கவில்லை. புஷ்பாக்காவிடம் அழாக்குறையாக என் குறைப்பாட்டைச் சொன்னேன். "முதல்ல அப்படித்தான் இருக்கும். அப்புறம் அந்தத் திரையைத் தூக்கினதும் உள்ளே வெள்ளைத்திரை இருக்கும். அதிலதான் படம் பார்க்கப்போறோம். திரை தூக்கும்போது ஒரு மியூசிக் போடுவாங்க பாரு... நல்லா இருக்கும்... உனக்குப் பிடிக்கும்..." என்று என் கனவினை வளர்த்தார்.

மியூசிக் என்கின்ற சொல்லை புஷ்பாக்கா சொல்லித்தான் முதன்முதலாகக் கேட்டேன். இசை என்ற சொல்லே இசைபோன்ற பெண்ணின் இதழிலிருந்து என்னை அடைந்ததுதான். "மீசிக்கா ? அப்படின்னா என்னக்கா ?" என்று கேட்டேன். "மியூசிக்குன்னா பாட்டுல வர்றது..." என்றார். "மியூசிக் போடும்போது சொல்றேன்... நீயே கேளு..." என்று என்னை அமர்த்தினார்.

இடைநாளின் பகற்காட்சி என்பதால் அரங்குக்குக் குறைவாகவே கூட்டம் வந்தது. வெளியே ஒலித்துக்கொண்டிருக்கும் பாடலை அணைத்துவிட்டார்கள் என்றால் படம் போடத் தொடங்குகிறார்கள் என்று பொருள். வெளியே ஒலித்துக்கொண்டிருந்த பாடல் நின்றது. உள்ளே "ஜிம்கும் ஜிம்கும்..." என்று இதமான ஒலிப்பில் இசை தொடங்கியது. கீழ்முனைச் செவ்விளக்குகள் ஒளிர மடிப்பலைகள் ஓடிய அடர்சிவப்புத் திரை மேலுயரத் தொடங்கியது. உள்ளிருந்த வெள்ளித்திரை மின்னியது. புஷ்பாக்கா என் முகத்தைத் திருப்பி "நான் சொன்னேன்ல மியூசிக்கு... இதுதான்..." என்று மலர்ச்சியான சிரிப்போடு சொன்னார். அந்த மெல்லொளியில் சிற்றிருளில் இதமான நறுமணத்தோடு என்னருகே அமர்ந்து சொன்ன அந்தக் கன்னி முகத்தின் பேரருளை இன்றுவரை என்னால் மறக்கவே முடியவில்லை. எனக்குள் ஏதோ ஒரு மொட்டவிழ்ந்தது. அன்பின் ஊற்று பெருக்கெடுத்தது. அன்றைக்கு நாங்கள் கண்ட படம் கோழி கூவுது. என் அகநினைவுகளின் விடியல் பொழுதும் அன்றைய நண்பகல்தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X