Exclusive: விரைவில் தில்லுக்கு துட்டு 3... பேய்களே ஓடிடுங்க... சந்தானமும் ராம்பாலாவும் வராங்க!
தில்லுக்கு துட்டு 3 படத்தை எடுக்க தயாராக இருப்பதாக இயக்குனர் ராம்பாலா தெரிவித்துள்ளார்.
சென்னை: தில்லுக்கு துட்டு மூன்றாம் பாகம் எடுப்பதற்கான கதை இப்போதே தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் ராம்பாலா.
நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான படம் தில்லுக்கு துட்டு 2. ராம்பாலா இயக்கியுள்ள இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. முதல் பாகத்தைப் போலவே இதிலும் பேயை வைத்து நன்றாக செய்திருக்கிறார்கள்.
இப்படம் குறித்த கேள்விகளுடன் இயக்குனர் ராம்பாலாவை சந்தித்தேன். நம்மிடம் அவர் கூறியதாவது,

நாங்க ஹேப்பி அண்ணாச்சி
"நாங்கள் நினைத்தது போலவே தில்லுக்கு துட்டு 2 திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தியேட்டரே அதிரும் வகையில் மக்கள் சிரித்து மகிழ்ந்து படத்தை ரசித்து பார்க்கிறார்கள். எனவே எங்கள் படக்குழு மகிழ்ச்சியாக இருக்கிறது.

பேயை கலாய்க்கிறோம்
பொதுவாக பேய் படங்களில் பேயை பார்த்து நடிகர்கள் பயப்படுவதை கண்டு மக்கள் சிரிப்பார்கள். ஆனால் நாங்கள் பேயை கலாய்த்து காமெடி செய்ய நினைத்தோம். முதல் பாகத்தை போலவே இதிலும் அது நன்றாகவே ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. மேலும், வேறு யாரையாவது கலாய்த்தால் சண்டைக்கு வருவார்கள். ஆனால் பேயை கலாய்த்தால் யாரும் போராட வரமாட்டார்கள்.

சந்தானத்தின் கலாய்
சந்தானம் தனது வழக்கமான கவுண்டர் டயலாக் மூலம் சிறப்பாக நடித்திருக்கிறார். மிகையில்லாத அளவான நடிப்பின் மூலம் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார். அவருடன் மொட்டை ராஜேந்திரனும் சேர்ந்து செம்மையாக கலாய்த்திருக்கிறார்கள்.

ஜாலியான ஆள்
நான் அடிப்படையிலேயே ஒரு ஜாலியான நபர். எனவே எனது டீமிலும் ஜாலியான நபர்கள் இருப்பதையே விரும்புவேன். யாராவது சீரியசான ஆட்கள் வந்தால், உள்ளே சேர்க்கமாட்டேன். அதனால் தான் காமெடி படங்கள் எடுக்க முடிகிறது. மேலும் பணம் கொடுத்து படம் பார்க்க வருபவர்களை சிரிக்க வைப்பதே எனது கடமையாக நினைக்கிறேன்.

தில்லுக்கு துட்டு 3
தில்லுக்கு துட்டு 3ம் பாகத்துக்கான கதையும் தயாராக இருக்கிறது. சந்தானம் சரி என்று சொன்னால் உடனே ஷூட்டிங் கிளம்பிவிடுவோம். தற்போது கயல் சந்திரனை வைத்து 'டாவு' படத்தை எடுக்க உள்ளேன். இதுவும் ஒரு காமெடி படம் தான். இந்த படத்திலும், கேரளாவைச் சேர்ந்த பெண் தான் ஹீரோயின்", என இவ்வாறு அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications