எப்படி இருக்கீங்க அண்ணா என பாலு கேட்பது என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது..கேஜே யேசுதாஸ் உருக்கம்!
சென்னை: தானும் பாலும் ஒரு தாய் வயிற்றில் பிறக்காவிட்டாலும் தாங்கள் சரஸ்வதியின் மடியில் பிறந்த சகோதரர்கள் என பிரபல பாடகரான கேஜே யேசுதாஸ் உருக்கமாக கூறியுள்ளார்.
பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் அவரது உடல் காவல்துறை மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவால் கோடிக்கணக்கான ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். நடிகர்கள் விஜய், அர்ஜூன், இயக்குநர் பாரதிராஜா, பாடகர் மனோ உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

சகோதரர்கள் போல
இந்நிலையில் பாடகர் எஸ்பிபி அண்ணா என வாஞ்சையோடு அழைக்கும் கே ஜே யேசுதாஸ் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் நானும் பாலுவும் சொந்த சகோதரர்கள் போல. அவருடைய பிரிவை என்னால் தாங்க முடியவில்லை.

அண்ணா எப்படி இருக்கீங்க
நாங்கள் ஒரு தாய் வயிற்றில் பிறக்காவிட்டாலும் நாங்கள் சங்கீத சரஸ்வதி தாயின் மடியில் பிறந்த பிள்ளைகள். எஸ்பி பாலசுப்ரமணியம் என்னை அண்ணா எப்படி இருக்கீங்க என்று கேட்பது இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஆத்மார்த்தமாக அழைப்பார்
பாலு, என்னை அண்ணா என இதயத்திலிருந்து ஆத்மார்த்தமாக அழைப்பார். எஸ்பிபியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு உருக்கமாக அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பாடகர் கேஜே யேசுதாஸ்.

50 ஆண்டுகள் நிறைவு
இசைத்துறையில் கடந்த 1966 -ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் பாடகராக தன் பயணத்தை தொடங்கிய எஸ்பிபி, இசை உலகில் கடந்த 2016 ஆண்டு தனது 50 ஆண்டுகளை நிறைவு செய்தார். எஸ்பிபி தமிழில் ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் முதலில் பாடினார்.

யேசுதாஸூக்கு மரியாதை
தன் திரை இசைப் பயணத்தில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு தன் குடும்பத்தில் ஒருவராக கருதும் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸூக்கு அவர் பாத பூஜை மரியாதை செலுத்தினார். தன் மனைவி மற்றும் மகன் உட்பட குடும்பத்தினருடன் சேர்ந்து கே.ஜே.ஜேசுதாஸ் -பிரபா தம்பதியினருக்கு பாதபூஜை செய்தார்.

மிகுந்த மரியாதை
மேலும் தனக்கு மிகவும் பிடித்தவர் பாடகர் முகம்மது ரஃபி. என்றும் அதன் பின் தனக்கு மிகவும் நெருக்கமானவர் அண்ணன் யேசுதாஸ் தான் என பல மேடைகளில் கூறியிருக்கிறார். தனக்கு முன்னோடி யேசுதாஸ் அண்ணாதான் என்று கூறும் எஸ்பிபி, அவர் மீது மிகுந்த மரியாதையையும் பாசத்தையும் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











