பாரதிராஜா அண்ணன் ஊருக்கு வந்துட்டா போதும்.. தங்கச்சி உடைந்து போய் அழுதுட்டாங்க.. அவ்வளவு பாசம்
சென்னை: பாரதிராஜாவின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இன்று மாலை அவரது இறுதிச்சடங்குகள் நடக்கவிருக்கின்றன. முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் எல்லாம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் பாரதிராஜாவின் உடன் பிறந்த சகோதரி தனது அண்ணன் குறித்து பேசியிருப்பது உருக வைத்திருக்கிறது.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் கடந்த வருடத்தில் உயிரிழந்தார். மகன் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத பாரதிராஜா மனதளவில் சோர்ந்து போனார். மேலும் வயோதிகம் காரணமாக அவருக்கு உடல்நல குறைவும் ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாத கணக்கில் அங்கே இருந்த அவரை ராதிகா உள்ளிட்டோர் நேரில் சென்று சந்தித்துவிட்டு வந்தார்கள்.எப்படியும் அவர் மீண்டும் விடுவார் என்றுதான் எல்லோருமே நினைத்தார்கள்.

இமயம் சரிந்தது: அவர்கள் நினைத்தபடி கொஞ்சம் அவரது உடல்நிலையும் தேறியதுதான். உடனே மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் இருந்தபடி சிகிச்சை தொடர்ந்தது. சூழல் இப்படி இருக்க இன்று அதிகாலை மீண்டும் அவரது உடல்நலம் குன்ற; உயிரும் பிரிந்துவிட்டது. அவருக்கு வயது 84 ஆகும். இயக்குநர் இமயத்தின் உயிரிழப்பு ஒட்டுமொத்த திரைத்துறையிலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று இறுதி சடங்குகள்: அவரது உயிரிழப்பை கேள்விப்பட்டு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவருகிறார்கள். முதலமைச்சர் விஜய் வீட்டுக்கு அருகில்தான் பாரதிராஜாவின் வீடும் இருக்கிறது.விஷயத்தை கேள்விப்பட்டு உடனே அவர் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என இயக்குநர் வசந்தபாலன் கோரிக்கையும் வைத்திருக்கிறார். இன்று மாலை இறுதி சடங்குகள் நடக்கும் என தெரிகிறது.
தங்கை பேட்டி: இந்நிலையில் தேனி அல்லிநகரத்தில் இருக்கும் பாரதிராஜாவின் உடன் பிறந்த தங்கை தனியார் ஊடகத்திடம் உருக்கத்தோடு பேசினார். அப்போது அவர், "பாரதிராஜா எனக்கு உடன் பிறந்த அண்ணன். அவருக்கு உடல்நிலை சரியில்லை என சொன்னார்கள். நேரில் சென்று பார்க்கலாம் என்று இருந்தேன். ஆனால் இறந்துவிட்டார். என் மீது ரொம்ப பிரியமாக இருப்பார். நேரில் பார்த்தால் உடனே கட்டி அணைத்துக்கொள்வார்.
மனோஜ் இறந்தபோது: மனோஜ் இறந்தபோதுதான் அவரை நான் நேரில் பார்த்தது. அதற்கு பிறகு பார்க்கவில்லை. நானும் போகவில்லை. அவரும் வரவில்லை. இரண்டு பெண் பிள்ளைகளை விட்டுவிட்டு மனோஜ் போனதிலிருந்தே அண்ணன் மனதை விட்டுவிட்டார். அவர் ஊருக்கு வந்துவிட்டால், இங்கே சொசைட்டி என்ற பகுதியில் பெரிய வீடு இருக்கிறது. அங்கே கிளம்பி சென்று பார்த்து பேசிவிட்டு வருவோம். ரொம்ப பிரியமாக இருப்பார். அவர் இன்னும் கொஞ்ச நாட்கள் இருப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் உயிரிழந்துவிட்டார். எனது பெயர் பாரதி. சின்ன அண்ணன் பெயர் ஜெயராஜ். அதனால்தான் அவர் பாரதிராஜா என்று பெயர் வைத்துக்கொண்டார். அவரை நாங்கள் பால்பாண்டி என்றுதான் கூப்பிடுவோம்" என்றார் அழுதபடி.


Click it and Unblock the Notifications
