உதய்கிரணை தற்கொலையில் தள்ளிய நிதி நெருக்கடி, தொடர் தோல்விகள்...!
இளம் நடிகர் உதய் கிரண் ஏன் தற்கொலை செய்து கொண்டார்... என்ன காரணமாக இருக்கும்... பத்து நிமிடத்துக்கு முன்பு வரை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தவரை தற்கொலைக்குத் தூண்டியது எது?
-ஆந்திரத் திரையுலகம் மட்டுமல்ல, தமிழில் அவருக்கு நெருக்கமான பலரும் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வி இது.

அடுத்தடுத்து வெற்றிப் படங்கள்
2000-ல் சித்ரம் மூலம் அறிமுகமான உதய் கிரண் அடுத்தடுத்து நடித்த படங்கள் பெரும் வெற்றியை ஈட்டின. நுவ்வு நேனு, மனசந்தே நுவ்வு, ஸ்ரீராம் போன்ற படங்களில் அவரை வசூல் நாயகனாக உயர்த்தின.

சிரஞ்சீவி மகளுடன்
2003-ம் ஆண்டு உதய் கிரணுக்கும் சிரஞ்சீவி மகளுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் இரு குடும்பத்தினருக்கும் ஒத்துப் போகாததால் அந்த நிச்சயதார்த்தம் முறிந்தது. பின்னர் பத்து ஆண்டுகள் திருமணம் செய்து கொள்ளாமலிருந்த உதய் கிரண், தன் தோழி விஷிதாவை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை...
விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொண்டாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை நிம்மதியாக இல்லை என்கிறார்கள்.

தொடர் தோல்விகள்
ஆரம்பத்தில் தொடர் வெற்றிகள் கொடுத்து வந்த உதய் கிரணுக்கு, 2005-க்குப் பிறகு பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஜெய் ஸ்ரீராம் சுமாராகத்தான் போனது.

தமிழில்
தமிழில் பொய் படத்தில் நல்ல லட்சணமான ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் படுதோல்வி அடைந்தது. அடுத்து சத்யராஜுடன் வம்புச் சண்டை படத்தில் நடித்தார். எடுபடவில்லை. இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு தமிழ் படத்துக்கு பூஜை போட்டார்கள். உதய் கிரண்தான் மெயின் ஹீரோ. படம் பாதியில் நிற்கிறது. தெலுங்கிலும் ஒரு படம் அப்படியே நிற்கிறது. இன்னொரு படம் முடிந்து வெளியிட முடியாமல் முடங்கியுள்ளது.

நிதி நெருக்கடி
வெற்றிகள் இல்லாமல், படங்களும் வெளியாகாமல், பெரிய வாய்ப்புகளும் இல்லாததுதான் அவரது இந்த முடிவுக்குக் காரணம் என ஆந்திர திரையுலகினர் கூறுகின்றனர். இன்னும் சிலரோ அவரது முடிவுக்கு குடும்பப் பிரச்சினைதான் காரணம் என்கிறார்கள்.
உண்மையான காரணத்தை சில தினங்களில் விசாரித்து கண்டுபிடித்து விடுவோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











