தீபிகாவிடம் யாரும் பார்க்காத அந்த குணத்தை நான் பார்த்தேன்: ரன்வீர் சிங்
மும்பை:மற்றவர்கள் யாரும் பார்க்காத குணத்தை தீபிகா படுகோனேவிடம் பார்த்ததாக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனேவும் சேர்ந்து நடித்தபோது காதலில் விழுந்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு தீபிகா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

ஆசிட்வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கை வரலாற்று படமான சாப்பக்கை தயாரித்து நடித்துள்ளார் தீபிகா. இந்நிலையில் ரன்வீர் சிங் தனது மனைவி தீபிகா பற்றி பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,
தீபிகாவிடம் ஒரு ஸ்பெஷலான குணம் உள்ளது. குழந்தை போன்ற அந்த குணத்தை என்னைத் தவிர வேறு யாரும் பார்த்தது இல்லை. அவரின் அந்த குணம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. தீபிகாவை திருமணம் செய்த பிறகு என் வாழ்வில் நல்ல, நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
தீபிகா மீதான காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு இடையே நல்ல புரிதல் உள்ளது. அதனால் கருத்து வேறுபாட்டுக்கோ, சந்தேகத்திற்கோ இடமே இல்லை. எங்களின் அனைத்து அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வோம் என்றார்.
பாலிவுட்டில் கொண்டாடப்படும் ஜோடிகளில் ஒன்று ரன்வீர்-தீபிகா ஜோடி. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் தீபிகா. இந்நிலையில் கணவர் ரன்வீருக்காக தனது கொள்கையை தளர்த்தியுள்ளார்.
கபிர் கான் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்து வரும் 83 படத்தில் அவருக்கு மனைவியாக நடிக்கிறார் தீபிகா. அந்த கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் ரன்வீருக்காக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் சிறிய கதாபாத்திரம் என்றாலும் பெரிய தொகையை சம்பளமாக வாங்கியுள்ளாராம்.
1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றது தான் 83 படத்தின் மையக்கரு. படத்தில் ரன்வீர் சிங் கபில் தேவாக நடிக்கிறார். இந்த படத்தில் ஜீவாவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











