நேசமணி டிரெண்டிங்கா, சொல்லவே இல்ல, ஹய்யோ ஹய்யோ: வடிவேலு லகலக
Recommended Video
சென்னை: நேசமணி கதாபாத்திரம் உலக அளவில் டிரெண்டாகியுள்ளது குறித்து வடிவேலு கருத்து தெரிவித்துள்ளார்.
ப்ரெண்ட்ஸ் படத்தில் வந்த நேசமணி கதாபாத்திரம் குறித்து தான் நேற்று இரவில் இருந்து சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. ட்விட்டர் டிரெண்டில் பிரதமர் நரேந்திர மோடியை முந்திவிட்டார் கான்டிராக்டர் நேசமணி.

நேசமணியை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் போடப்பட்டுள்ளன. நேசமணியை தாக்கிய வழக்கில் அபர்சன்ட்டிகளில் ஒருவரான சந்துருவை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் விசாரணையில் அவர் கூறியதாவது, நான் சந்துரு இல்லை. என் பெயர் நந்த கோபாலன் குமரன். எனக்கு கான்டிராக்டர் நேசமணி யார் என்றே தெரியாது என்று கூறியதாக சமூக வலைதளங்களில் கலாய்த்துள்ளனர்.
இதற்கிடையே நேசமணி தலையில் சுத்தியல் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அறிந்து அரவிந்தனுக்கு(விஜய்) அதிர்ச்சியில் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர். இன்று நாள் முழுவதும் நேசமணி ட்வீட்டுகள், மீம்ஸுகளை பார்த்து பார்த்து சிரித்து வயிறெல்லாம் வலிக்கிறது.
இந்நிலையில் நேசமணி உலக அளவில் டிரெண்டாகியுள்ளது குறித்து பிரபல தொலைக்காட்சி சேனல் வடிவேலுவிடம் கேட்டுள்ளது. அந்த சேனலிடம் அவர் கூறியதாவது,
என்ன நடக்கிறதுன்னே தெரியலய்யா. நான் எதையுமே பார்க்கலியே. நான் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டேனா, என்னாலேயே நம்ப முடியலயே. அமெரிக்கா வரை சென்றுவிட்டதா, நன்றி நன்றி. நான் விஜய், சூர்யாவுடன் நடித்த படத்தில் தான் நேசமணியாக நடித்தேன். நான் பல படங்களில் நடித்து மக்களை சிரிக்க வைத்துள்ளேன். ஆனால் இது பற்றி எனக்கு தெரியாது. நேசமணி போன்ற கதாபாத்திரம் எல்லாம் கடவுள் கொடுத்த பரிசு என்றார்.
உலகமே அந்த நேசமணி யார், அவருக்காக பலர் எதற்கு பிரார்த்தனை செய்கிறார்கள் என்று மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கிறது. வடிவேலுவோ இப்படி ஒரு விஷயம் நடந்ததே தெரியாது என்கிறார். நேசமணி யார், அவர் எங்கு பிறந்தார், கான்டிராக்டர் ஆகும் முன்பு என்ன செய்தார் என்று எல்லாம் நெட்டிசன்கள் கதை, கவிதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
மோடி மீண்டும் பதவியேற்றதும் நேசமணிக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏதோ நேசமணி நிஜமாகவே இருப்பது போன்று நெட்டிசன்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











