கமல் சார், விஸ்வரூபம் 2 என்னாச்சு...?
சென்னை: கமலின் விஸ்வரூபம் 2 படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.
பல்வேறு தடைகளைத் தாண்டி தனது விஸ்வரூபம் படத்தை வெளியிட்டார் கமல். பின்னர் அக்கதையின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகமான விஸ்வரூபம் 2ஐ உருவாக்கும் வேலைகளில் தீவிரமாக இறங்கினார்.
முதல்பாகத்தில் சொல்லப்படாத, விடுபட்டுப் போன பல கேள்விகளுக்கான பதில் இரண்டாம் பாகத்தில் இருக்கும் எனச் சொல்லப்பட்டதால் படத்தைப் பற்றிய ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அப்போதே எகிறத் தொடங்கியது.
ஆனால், தொடர்ந்து விஸ்வரூபம் பட ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. அப்படத்திற்குப் பின்னர் தொடங்கப்பட்ட அடுத்ததடுத்த படவேலைகளில் கமல் பிசியாக இருப்பதால் எப்போது விஸ்வரூபம் 2 ரிலீசாகும் என ரசிகர்கள் கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

ஏப்ரல் ஃபூல் ஆன ரசிகர்கள்...
முதலில் விஸ்வரூபம் 2 ஏப்ரல் 14ல் வெளியாகும் என்று கமல் கூறினார். ஆனால் பட ரிலீஸ் தள்ளிப் போனது. இதோ மாதம் ஆகஸ்ட் ஆகி விட்டது. ஆனால், இன்னும் ரிலீஸ் பற்றி உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

உத்தமவில்லன்...
இதற்கிடையில் திடீரென உத்தமவில்லனில் நடிக்கப் போய் விட்டார் கமல். அதுவும் கூட கிட்டத்தட்ட முடிவடையப் போகிறது. படம் அக்டோபர் மாதம் ரிலீசாக உள்ளதாகத் தெரிகிறது.

மீண்டும் உயிர் பெற்ற மருதநாயகம்...
2 மாதங்களுக்கு முன்பு மருதநாயகம் மீண்டும் உருவாகப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுவும் கூட பாதியிலேயே அமுங்கிப் போய் விட்டது.

பாபநாசம்...
இந்நிலையில் தற்போது தனது அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டார் கமல். மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் பாபநாசம் என்ற பெயரில் கமல், கெளதமி நடிக்கவுள்ளனர்.

குறையும் பரபரப்பு...
இதனால் விஸ்வரூபம் 2 என்னாச்சு என்ற கேள்வி ரசிகர்களைக் குடைய ஆரம்பித்துள்ளது. அதேசமயம், இதைப் பற்றிய பரபரப்புப் பேச்சும் குறைய ஆரம்பித்துள்ளது.

போஸ்ட் புரொடக்ஷன்...
இதுகுறித்து கமல்ஹாசன் தரப்பில் விசாரித்தால், போஸ்ட் புரொடக்ஷன் வேலை நிறைய பாக்கி உள்ளது. அதற்கு அவகாசம் தேவை என்று பதில் வருகிறது.
உண்மையில் எப்போதுதான் விஸ்வரூபம் 2 வெளியாகும்.. கமலுக்கே வெளிச்சம்!


Click it and Unblock the Notifications











