Kanguva Oscar: எல்லாமே பணம் தானா? சூர்யாவின் கங்குவா ஆஸ்கருக்குள் நுழைந்ததன் பின்னணி!
சென்னை: கடுமையான விமர்சனத்தையும், வசூல் ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்த சூர்யாவின் கங்குவா திரைப்படம், ஆஸ்கர் விருது ரேஸில் இடம் பெற்றுள்ளது.
பெரும் விமர்சனத்தை சந்தித்த இந்த படம் எப்படி ஆஸ்கருக்குள் நுழைந்தது என்று இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான படம் கங்குவா. 400 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமான பொருட் செலவில், பான் இந்திய திரைப்படமாக உலகம் முழுவதும் 16 மொழிகளில் வெளியான திரைப்படம் தான் கங்குவா. இதில் சூர்யா, திஷா, பாபி தியோல், யோகிபாபு, நட்டி, போஸ் வெங்கட், கருணாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக சோஷியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்ட கங்குவா படம் நவம்பர் மாதம் வெளியானது.
கங்குவா மோசமான விமர்சனம்: படம் வெளியாக முதல் நாளில் இருந்தே படம் மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்து வந்தன. படத்தின் கதை அடுத்து என்ன நடக்கப்போகிறது என யூகிக்கக்கூடிய வகையில் இருப்பதாகவும், படம் முழுக்க சூர்யா கத்திக்கொண்டே இருப்பதாகவும் இணையத்தில் மோசமான விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, தியேட்டர் உரிமையாளர்களிடம் வால்யூமை இரண்டு புள்ளிகள் குறைக்கும் படி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவித்திருந்தார். கங்குவா படத்தின் முதல் நாள் வசூல் 58.62 கோடி என ஸ்டுடியோ கிரீன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முதல் நாள் வசூல் சிறப்பாக இருந்த போதும், படத்திற்கு வந்த மோசமான விமர்சனத்தால், அடுத்தடுத்த நாட்களில் வசூல் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.
ஆஸ்கரில் கங்குவா: மேலும், சூர்யாவின் கேரியரில் கங்குவா ஒரு மோசமான படம் என்று சொல்லும் அளவிற்கு படம் தோல்வியைத் தழுவியது. ஆனால், கங்குவா படத்திற்காக சூர்யா கடுமையாக உடல் உழைப்பை கொடுத்து இருந்தார். மேலும், படத்தின் கேமிரா வேலை, வி.எஃப்.எக்ஸ் என அழைத்தும் சிறப்பாக இருந்தது. திரைக்கதையில் தான் சிறுத்தை சிவா கோட்டை விட்டுவிட்டார். கங்குவா படத்தின் தோல்வி சூர்யா ரசிகர்களை கவலையில் ஆழ்த்திய நிலையில், அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் 2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள 97வது ஆஸ்கர் விருது போட்டியில் கலந்துகொள்ள படக்குழு விண்ணப்பித்துள்ளது.
நுழைந்தது எப்படி: உலகம் முழுவதும் இருந்து 323 படங்கள் ஆஸ்கருக்கு விண்ணப்பித்து இருக்கும் நிலையில், இதில், ஆஸ்கர் அகாடமி வகுத்துள்ள தகுதிகளை பெற்ற 207 படங்களின் பட்டியல் வெளியானது. அந்த பட்டியலில் கங்குவா படமும் இடம்பெற்றுள்ளது. இதனால், சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் கங்குவா படம் எப்படி ஆஸ்கருக்கு போகும் என இணையத்தில் பலரும் கேள்வி கேட்டு வரும் நிலையில், கங்குவா படம் ஆஸ்கருக்கு நுழைந்தது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஆஸ்கர் நடைமுறைகளின்படி இல்லாமல், சில பல ஆயிரம் டாலர்களை கட்டணமான செலுத்தி, விண்ணப்பிப்பதன் மூலம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் திரைப்படங்கள் பங்கேற்க முடியும். அந்த வழிமுறையில் தான் கங்குவா படம் ஆஸ்கர் ரேஸுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











