இளையராஜா – பிராசாத் ஸ்டூடியோ நிர்வாகம் இடையே என்னதான் பிரச்சனை.. ஒரு சின்ன ரவுண்டப்!
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவை சந்திக்க வேண்டும் என்றால், உடனே கார் எடுத்துக் கொண்டு சினிமா பிரபலங்கள் சென்றது, அவரது வீட்டுக்கு அல்ல, சாலி கிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவிற்குத் தான்.
கிட்டத்தட்ட 42 வருடங்களாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை, எல்.வி. பிரசாத், இவரது திறமையை பாராட்டி, அவருக்காக அமைத்துக் கொடுத்த ரெக்கார்டிங் தியேட்டரில் தான் இளையராஜா இசையமைத்துள்ளார்.
தனது வீட்டை விடவும் அதிக சென்டிமென்ட்டான அந்த இடத்தை இடிப்பதற்கு பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் முடிவு செய்த நிலையில் தான் பிரச்சனை உருவானது.

வாடகை வேணா தருகிறேன்
தனது இசை கோயிலாக எண்ணி இருந்த அந்த ரெக்கார்டிங் தியேட்டரை, திடீரென காலி பண்ண வேண்டும் என்றும், எல்.வி. பிரசாத்தின் வாரிசுகள் தரப்பில் இருந்து இளையராஜாவுக்கு அழுத்தம் வர ஆரம்பித்தது. அவரது பொருட்கள் எல்லாம் வெளியே கொண்டு வந்தும் வீசப்பட்டன. இத்தனை நாட்கள் உயிராக இருந்த இடத்தை பிரிந்து விடக் கூடாது என்று எண்ணிய இளையராஜா வாடகை வேண்டும் என்றாலும் தருகிறேன் என அதன் தற்போதைய நிர்வாகிகளிடம் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இடிக்கப் போறோம்
ஆனால், அந்த இடத்தை, நீங்க காலி பண்ணிதான் ஆக வேண்டும், அந்த இடத்தில் நாங்க புதுசா தியேட்டர் கட்ட போறோம், பொருளாதார சிக்கல் என பல வாதங்களை முன் வைத்து, இளையராஜாவை அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்துவதில், முனைப்பாக செயல்பட்டனர். அதனை அறிந்த இளையராஜா, இதற்கு மேலும், சும்மா இருக்க முடியாது என்று தீர்மானித்தார்.

பாரதிராஜா தலைமையில் பேச்சுவார்த்தை
இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சினிமா கலைஞர்கள் ஒன்று திரண்டு நிர்வாகத்துக்கு எதிராக போராடியும், பேச்சுவார்த்தை நடத்தியும் பார்த்தனர். ஆனால், எந்தவொரு சமரச பேச்சுவார்த்தைக்கும் நிர்வாகம் ஒத்து வராததால், கடைசியாக நீதிமன்றத்தை நாடினார் இளையராஜா. அந்த வழக்கு 17வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இசைக் குறிப்புகள் திருட்டு
இந்நிலையில், தற்போது பிரசாத் ஸ்டூடியோவின் நிர்வாக இயக்குநர் சாய் பிரசாத் மீது சென்னை காவலர் ஆணையத்தில் இளையராஜா பரபரப்பு புகார் அளித்துள்ளார். தனது அறையின் கதவுகளுக்கு கள்ளச்சாவி போட்டு பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினர் இசைக் குறிப்புகளை லாக்டவுனை பயன்படுத்தி திருடி விற்றுள்ளதாகவும், பல விலை மதிக்க முடியாத குறிப்புகளை அழித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











