16 வயதில் வாழ்க்கையே பாரமானது ஏன்.. விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலைக்கு காரணம் இதுவா?
சென்னை: 16 வயதில் வாழ்க்கையே பாரம் என்று தற்கொலை முடிவை தேடியதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று உளவியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மூத்த மகளான மீரா, இன்று அதிகாலை 3 மணியளவில் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
அவரது உடலை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மீரா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விஜய் ஆண்டனி மகள்: இதையடுத்து மீராவின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு உடற்கூறு ஆய்வு நடந்து வருகிறது. அதன்பிறகு உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும். சொல்லமுடியாத துயரத்தில் இருக்கும் விஜய் ஆண்டனிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறிவருகின்றனர்.
மன அழுத்தம்: முதற்கட்ட விசாரணையில் மீரா சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதற்காக அவர் மருந்து எடுத்துவந்ததாக சொல்லப்படுகிறது. தற்கொலைக்கான காரணம் தெரியாததால், போலீசார், மீராவின் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரிக்க உள்ளனர். மேலும், அவரது செல்போனை ஆய்வு செய்து வருகின்றனர்.
உளவியல் நிபுணர்: இந்நிலையில், 16 வயதில் வாழ்க்கையே வெறுத்துப்போகும் அளவிற்கு மனதில் என்னை பிரச்சனை இருந்து இருக்கும் என உளவியல் நிபுணர் கூறியுள்ளார். இதில், இந்த காலத்து குழந்தைகளுக்கு தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லை, யாரிடமும் மனம் விட்டு பேசுவது இல்லை. போன், கம்ப்யூட்டர், டிவி உடன் தான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். யாரிடமாவது மனம் விட்டு பேசாவிட்டால், மன அழுத்தம் இருந்து கொண்டேதான் இருக்கும்.
புரியவைக்க வேண்டும்: அதே போல பெற்றோர்களும் குழந்தைகளை தங்களது கண்காணிப்பில் வைத்து இருக்க வேண்டும். அவர்களின் நடவடிக்கையில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும், பெற்றோர் அதை கண்டுபிடித்து, இது எல்லாம் ஒரு பிரச்சனையா என்று குழந்தைகளுடன் உட்கார்ந்து பேசி அதை புரியவைக்க வேண்டும். ஆனால், பல பெற்றோர்கள் அதை செய்வது இல்லை.
கவுன்சிலிங் தேவை: 16 வயது என்பது ஒரு அழகான வயது இந்த வயதில் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும், வாழ்க்கையே பாரமாக இருக்கிறது என்று எந்த குழந்தை நினைக்கிறதோ. அந்த குழந்தைக்கு அத்தனை பிரச்சனைகளும் மனதில் இருக்கிறது என்று அர்த்தம். இந்த நேரத்தில், குழந்தைகளின் பிரச்சனைகளை கண்டுபிடித்து மன அழுத்தத்தை போக்க கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் இதுபோன்ற விபரீதம் தான் நடக்கும் என உளவியல் நிபுணர் கூறியுள்ளார்.
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











