ரூ.25 கோடி நஷ்டம்.. பாதியில் நின்ற மோகன்தாஸ் படம்.. விஷ்ணு விஷாலின் ஈகோவால் வந்த பிரச்சனை!
சென்னை: வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் தமிழ்த் திரையுலகில் தன்னை ஒரு நல்ல நடிகராக நிலை நிறுத்திக்கொண்டவர் தான் விஷ்ணு விஷால். இவர் நடிகராக மட்டுமில்லாமல், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில் இவர் தயாரித்து நடித்த மோகன்தாஸ் திரைப்படம் இயக்குநர் ஏற்பட்ட ஈகோ பிரச்சனை காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சோசியல் மீடியாவில் பேச்சு எழுந்துள்ளது.
காவல்துறை அதிகாரியின் மகனான விஷ்ணு விஷால் திருச்சியில் தனது பள்ளி படிப்பை முடித்து எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். இவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால், உறவினர் ஒருவரின் உதவியின் மூலம் 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

நடிகர் விஷ்ணு விஷால்: இந்த திரைப்படத்தை தொடர்ந்து முண்டாசுபட்டியில், பால் பாண்டி, குள்ளநரி கூட்டம், நீர் பறவை, ராட்சசன், ஜீவா, இன்று நேற்று நாளை, சிலுக்குவார்பட்டி சிங்கம், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கட்டா குஸ்தி, போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன.நடிகராக ஜொலித்துக்கொண்டிருந்த விஷ்ணு விஷால், சொந்தமாக விஷ்ணு விஷால் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வேலையினு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தை தயாரித்தார். இவர் தயாரித்த முதல் படமே நல்ல வசூலை பெற்றது. இதைத் தொடர்ந்து, சிலுக்குவார்பட்டி சிங்கம், FIR, கட்டா குஸ்தி போன்ற படங்களையும் தயாரித்தார்.
மோகன்தாஸ்: இந்த படங்களைத் தொடர்ந்து மோகன்தாஸ் என்ற படத்தை தயாரித்து வந்தார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன், லல்லு, கருணாகரன், பிரகாஷ் ராகவன் மற்றும் ஷாரிக் ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று படத்தின் டீசர் வெளியானது. அந்த டீசரில் கையில் சுத்தியலை வைத்துக்கொண்டு, ஒருவரை கொடூரமாக தாக்கும் காட்சியில் அட்டகாசமாக நடித்திருந்தார் விஷ்ணுவிஷால். படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

25 கோடி நஷ்டம்: அதாவது மோகன்தாஸ் திரைப்படத்தை இயக்குநர் முரளி கார்த்திக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இடையே பிரச்சனை வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 15 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டுள்ளார் விஷ்ணுவிஷால். அந்த படம் மட்டுமில்லாமல் தன்னுடைய நிறுவனம் தயாரிக்க இருந்த மற்றொரு திரைப்படமான கவரிமான் பரம்பரை படத்தையும் 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கினார். அந்த படத்தையும் கிடப்பில் போட்டு உள்ளார்.அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்து நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால், அந்த படத்தையும் அவர் தயாரிக்க முன் வரவில்லை என்று கூறுப்படுகிறது. மோகன்தாஸ், கவரிமான் பரம்பரை படத்தால் கிட்டத்தட்ட விஷ்ணுவிஷாலுக்கு 25 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதை பெரிதாக பொருட்படுத்தாமல், தனது தயாரிப்பு நிறுவனத்தை மூடும் எண்ணத்தில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.
அண்மையில் விஷ்ணு விஷால் நடித்த இரண்டு வானம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதன் படப்பிடிப்பு இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் விஷ்ணு விஷாலுக்கு நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக தினேஷ் கே பாபு, இசையமைப்பாளராக திபு நினன் தாமஸ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











