For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  9 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி தெரிவித்த 'வருத்தம்' இது... ஆனால் மக்கள் எடுத்துக் கொண்ட விதம்??

  By Shankar
  |

  2008-ம் நடந்த காவிரிப் பிரச்சினைக்காக நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தில் அத்தனை நடிகர்களும் பங்கேற்றனர். ரஜினியும் கமலும் வழக்கம்போல பிரதானமாக அமர்ந்திருந்தனர்.

  அந்த போராட்டத்தின்போது மிகவும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தார் ரஜினிகாந்த். காரணம் அவரை மேடையில் வைத்துக் கொண்டே மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டார் சத்யராஜ். அந்த மேடையில் ஒவ்வொரு நடிகரும் ரஜினி பெயரைச் சொன்னபோது, வந்திருந்த கூட்டம் ஆர்ப்பரித்து அடங்கியது. அதில் கடும் எரிச்சலான சத்யராஜ், "நடிகர் (ரஜினி) பெயரைச் சொன்னதும் கைத்தட்டல் கிடைக்கிறது. ஆனால் நான் சொல்லமாட்டேன். நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவேன்.." என்று ஆரம்பித்து கடுமையாகப் பேசினார். ரஜினி காதுபடவே ஆபாச வார்த்தைகள் சிலவற்றையும் அவர் பேசினார்.

  ரஜினியின் முறை வந்தது. கர்நாடகத்தில் பேருந்துகளைக் கொளுத்தும், வன்முறை வெறியாட்டம் போடும், தண்ணீர் தரவிடாமல் தடுக்கும் வன்முறையாளர்களை உதைக்க வேண்டாமா? என கொந்தளித்துவிட்டார்.

  இந்த போராட்டம் முடிந்த அடுத்த சில தினங்களில் குசேலன் படம் வெளயாகவிருக்கிறது. அங்கே கன்னட வெறியர்கள் ரஜினிக்கு எதிரான போராட்டங்களை வரிசையாக ஆரம்பித்து வன்முறையாட்டம் போட்டார்கள். ரஜினி படங்களை எரித்தார்கள். ஆனால் தமிழ் சினிமாவிலிருந்து ஒரு குரல், ஒரே ஒரு குரல் கூட காவிரி நீருக்காக ஆவேசமாகப் பேசிய ரஜினிக்கு ஆதரவாக எழவில்லை.

  நடிகர் சங்க தலைவராக இருந்த சரத்குமாரைக் கேட்டபோது, ரஜினி எங்களிடம் வந்து உதவி கேட்டால் செய்வோம் என்றார். படம் வெளியிட முடியாத சூழல்... பெங்களூரில் நிலவரம் கலவரமாக இருந்த சூழலில், ரஜினி ஒரு கடிதம் எழுதினார் கன்னட பிலிம்சேம்பர் தலைவர் ஜெயமாலாவுக்கு. அதில் படம் வெளியாக உதவுங்கள் எனக் கேட்டிருந்தார். வேறு எதுவும் அவர் விளக்கம் தெரிவிக்கவில்லை. மன்னிப்போ, வருத்தமோ கூட கேட்கவில்லை.

  அடுத்து ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கிறார். முழுக்க கன்னடத்தில் பேசிய ரஜினி சொன்னது இது:

  குசேலன் படம் தொடர்பாக நான் கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதில் குசேலன் படத்தை வெளியிட ஒத்துழைப்பு கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து இருந்தேன்.

  இந்த நிலையில் சில கன்னட அமைப்பினர் நான் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருவது என் கவனத்துக்கு தெரியவந்தது.

  நான் கன்னட மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பது என்னவென்றால் "உதைக்க வேண்டும்" என்று சொன்னது, பஸ்களை கொளுத்தியவர்களுக்கும், பொதுச் சொத்துக்களை சேதம் விளைவித்தவர்களுக்கும் மட்டுமே பொருந்தும். மற்றவர்களை பொதுவாக குறிப்பிட்டு அப்படிச் சொல்லவில்லை.

  ஓசூர் ரோட்டில் போராட்டம் நடந்தபோது வன்முறையில் ஈடுபட்டவர்களை, பஸ்களைக் கொளுத்தியவர்களை நான் கண்கூடாகப் பார்த்தேன். ஆனால் அவர்கள் எந்த அமைப்பையும் சேர்ந்தவர்கள் அல்ல. கன்னட மக்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

  நான் ஒரு பேச்சாளனோ, அரசியல்வாதியோ கிடையாது. எனவே பேசும்போது தவறுகள் ஏற்படுவது சகஜம். இதன் மூலம் கன்னடர்களிடம் நான் புதிய பாடம் ஒன்றை கற்றுக் கொண்டேன்.

  ஏதோ நடக்காதது நடந்து விட்டது. இனிமேல் இதுபோல் நடக்காது. இனி நான் பேசும்போது யாருடைய மனதும் நோகாதபடி கவனமாகப் பேசுவேன்.

  என் படங்களுக்கு கர்நாடகத்திலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். பெரும் பணம் முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் பாதிக்கக் கூடாது. எனவே, குசேலன் படம் கர்நாடகத்தில் வெளியாக ஒத்துழைப்பு கொடுங்கள். நீங்கள் கன்னடத்துக்காக போராடுங்கள். உங்கள் போராட்டத்துக்கு ஊக்கம், ஒத்துழைப்பு கொடுக்க தயார். நான் இன்று பணம், புகழோடு இருப்பதற்கு காரணம் நான் ஆரம்பத்தில் பார்த்த கண்டக்டர் வேலைதான். கண்டக்டராக வேலை செய்ததை நான் இன்னும் மறக்கவில்லை..."

  - ஆனால் இதை மீடியா எப்படித் திரித்தது தெரியுமா?

  "ரஜினி கன்னடர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார்!"

  "குசேலன் பட ரிலீசுக்காக கன்னடர்களிடம் சரணடைந்த ரஜினி"

  -இதுபோல பல நூறு தலைப்புகளில் செய்திகளை திரித்து வெளியிட்டு வெறுப்பைப் பரப்பினார்கள். அப்போது பிரபலமாக இருந்த ப்ளாக்குகள் மற்றும் அப்போதுதான் பரவ ஆரம்பித்திருந்த பேஸ்புக் போன்ற சமூகத் தளங்களில் அப்படி ஒரு வெறுப்பைப் பரப்பிக் கொண்டிருந்தனர் இந்த செய்திகளை மட்டுமே நம்பி.

  விளைவு... குசேலன் படத்துக்கு தமிழகத்திலும், ஆந்திரத்திலும் கன்னடத்திலும் ஆதரவில்லாமல் போனது. அமைதியாக இருந்தார் ரஜினி.

  இன்று சத்யராஜ் செய்திருப்பது என்ன? ரஜினி ஒரு இடத்தில்கூட மன்னிப்பு என்றோ வருத்தம் என்றோ குறிப்பிடவே இல்லை. இவர் தெளிவாகச் சொல்கிறார்... 'பாகுபலி 2 வெளியாக வேண்டும். யாருக்கும் நஷ்டம் வரக்கூடாது. எனவே கன்னடர்கள் மனம் என் பேச்சால் புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று.

  இதுதான் பக்கா சந்தர்ப்பவாதம் என்பது. உண்மையிலேயே மானத் தமிழன் என்றால், சத்யராஜ் என்ன செய்திருக்க வேண்டும்?

  "முடியாதுய்யா... வேணும்னா என் காட்சிகளை வெட்டி எறிந்துவிடு... இந்த எனக்கு நீ தந்த சம்பளம்... அல்லது கர்நாடகத்தில் ரிலீஸ் பண்ணாதே... அந்த நஷ்டத்தை நான் தருகிறேன்..." சொல்வாரா... சொல்லத்தான் முடியுமா?

  இன்று சத்யராஜை சமூக வலைத் தளங்களில் மக்கள் இப்படி வறுத்தெடுக்கக் காரணம், அன்று நடந்ததையெல்லாம் அத்தனை சுலபத்தில் யாரும் மறந்துவிடவில்லை என்பதுதான்.

  English summary
  Here is a flashback from 2008, when Rajinikanth gave an explanation to Kannada people about his Cauvery protest speech.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X